இந்திராணி தங்கவேல்
பருப்பு, கீரை மற்றும் காய்கறிகளில் குளிர்ச்சியை கொடுப்பவைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் இந்த வெயில் காலத்துக்கு நல்லது.
பழ வகைகளில் பேயன் வாழை, அத்திப்பழம், நாவல் பழம், விளாம்பழம், இலந்தைப்பழம், நெல்லிக்கனி, மாதுளம் பழம், திராட்சை போன்றவை குளிர்ச்சியை கொடுக்கும்.
புளியம்பழ சட்னி, இலந்தைப் பழ வடை, நெல்லி ஜூஸ், மாதுளம் பழ பகளாபாத் என்று பட்டையைக் கிளப்பலாம்.
காய்களில் வாழைக்காய், அத்திக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், பெரிய பூசணிக்காய், பரங்கிக்காய், புடலங்காய் போன்றவை உடல் சூட்டை நீக்கும்.
கீரை வகைகளில் பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை ,புளியாரைக் கீரை ,பரட்டை கீரை ஆகியவற்றிற்கு உடல் சூட்டை போக்கும் குணம் உண்டு.
இவைகளை பொடியாக அரிந்து இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைகளில் கலந்து பயன்படுத்தலாம். நல்ல குளிர்ச்சி கிடைக்கும். வாய்க்கு ருசியாகவும் இருக்கும்.
பயறு வகைகளில் பச்சைப் பயிறு, உளுந்து இரண்டிற்கும் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை உண்டு. ஆதலால் இவைகளில் பாயாசம், கஞ்சி, கூழ், அவித்து சாப்பிடுவது, அடைவடை செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றால் உஷ்ணதாகம் குறையும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, தாமரை தண்டு போன்றவை குளிர்ச்சியைத் தரும்.
கத்தரிப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை சாப்பிடுவதால் குளிர்ச்சி கிடைக்கும். இவைகளை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட சுவையள்ளும்.
வெங்காயத்தை சாப்பிடுவதால் சன் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கலாம். வெள்ளை வெங்காயம் கிடைக்கும் காலங்களில் அதை அதிகமாகப் பயன்படுத்தலாம். பச்சடி, சாலட்டுகளில் அதிகமாக பயன்படுத்தலாம்.
லெமன் ஜூஸ் போன்ற ஜூஸ் வகைகளில் சிறிதளவு சோம்பு சேர்த்து பருகலாம். நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
எருமைத் தயிரை நன்றாகக் கடைந்து சிறிதளவு சுக்குப் பொடி சேர்த்து அருந்தலாம். எருமைத் தயிரை பழைய சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
இது போல் வகை வகையாக செய்து, தேவையான அளவு சாப்பிட்டு, உடலில் குளிர்ச்சியை தங்க வைத்து ஆரோக்கியம் காப்போமாக!