கல்கி டெஸ்க்
தங்க ஒட்டியாணத்தில் அளவுக்கு ஏற்ப நான்கு முதல் ஆறு துவாரங்கள் இருக்கும். அவற்றை மட்டுமே பயன்படுத்தவும். இடுப்பின் அளவு சிறியது என்று இன்னும் குறுக்கினால், ஒட்டியாணம் வளைந்துவிடும்.
வைரம் பதித்த நகைகளை, மற்ற நகைகளுடன் ஒரே பெட்டியிலோ, பையிலோ வைக்காதீர்கள். மற்ற தங்க நகைகளில் கீறல்கள் விழ இது காரணமாகிவிடும்.
முத்து வாங்கும்போது முத்தின் பளபளப்பு, மேற்பரப்பின் அமைப்பு, நிறம், உருவ அமைப்பு, அளவு போன்றவை பார்த்து வாங்கவும். உருண்டையான உருவம் கொண்ட முத்துகள் விலை அதிகம்.
நிக்கல் சில்வர், ஜெர்மன் சில்வர் என்ற உலோகங்கள் பயன்படுத்தி செய்யப்படும் நகைகளில் துளியும் வெள்ளி கிடையாது. வெள்ளி என்று நம்பி ஏமாறாதீர்கள்.
செயின்களுக்கு விதவிதமான கொக்கிகள் இப்போது பொருத்தப்படுகின்றன. என்றாலும், செயினின் ஒரு பக்க முனையில் வட்டமாகவும் இன்னொரு பக்க வளைவில் வளைந்தும் உள்ள ‘பாம்பே கொக்கி’தான் பாதுகாப்பானது; உறுதியானது.
வளையல்கள் அழுத்தமாக இருப்பதற்காக அவற்றின் உட்புறம் செப்புக் கம்பிலோ அரக்கோ வைப்பது வழக்கம். வளையலை எடை போடும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வைர நகைகளில், தங்கத்தின் எடை, கற்களின் எண்ணிக்கை எடை எவ்வளவு என்பதை அந்த நகைகளிலேயே குறிப்பிட்டுத் தரும்படி வாடிக்கையாளர்கள் கேட்க வேண்டும். பில்லிலும் அதைக் குறித்து தரச்செய்ய வேண்டும்.
வைரம் வாங்கும்போது முக்கியமாக நான்கு 'C' கவனிக்க வேண்டும். முதலாவது 'Cut!' (வைரம் எவ்வளவு நேர்த்தியாக தீட்டப்பட்டிருக்கிறது என்பதாகும்.) அடுத்தது 'Carat' என்பது வைரத்தின் எடையாகும். மூன்றாவது 'Clarity!' கடைசியாக 'Colour'.
பொதுவாக வைரம் வெண்மையாகக் காணப்படும் என்றாலும், வண்ணமில்லாத வைரத்துக்குத்தான் மதிப்பு அதிகம். மேல்நாடுகளில் மஞ்சள், பச்சை, நீலம், பிங்க், கறுப்பு நிறங்களில்கூட வைரம் கிடைக்கும்.