பத்மப்ரியா
கடலை மாவு, பயத்த மாவு இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் தடவிக் கொண்டு கழுவினால் முகம் பளபளக்கும்.
ஒரு ஸ்பூன் கசகசாவை தண்ணீர் விட்டு அரைத்து, முகத்தில் பூசிக்கொண்டு, அரை மணிக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பளிச்சிடும்.
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து நீரில் கழுவிக்கொண்டால் முகம் அழகாகும்.
புதினா சாறு, எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து, மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடித்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் நீங்கி சுத்தமாகவும், அழகாகவும் ஆகிவிடும்.
பாலாடை அல்லது பசு வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கழுவிக் கொண்டால் முகம் மினுமினுக்கும். ஆனால் இதை தடவிக் கொண்டு வெயிலில் போகக்கூடாது.
திராட்சை அல்லது தர்பூசணி சாற்றை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் கழுவிக் கொண்டால், முகம் மென்மையாகிவிடும்.
சிறிது தயிரில் தக்காளிப் பழத்தை சேர்த்து குழைத்து, முகத்தில் தடவிக் கொண்டு, நன்கு ஊறியதும் நீரில் கழுவிக்கொண்டால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
கற்பூரத் தைலத்தை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்து கடலை மாவினால் தேய்த்து, நீர் விட்டு கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சுத்தமாகிவிடும்.
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து, பொடித்து, அதனுடன் பால், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, உலர்ந்தவுடன் நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
தேன், பப்பாளி பழம் இரண்டையும் சேர்த்து குழைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நுரில் கழுவி வர, முகம் மிருதுவாகி, பளபளப்பாக இருக்கும்.
தினமும் ஒருமுறை ஆலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்துக் கொண்டால் முகம் அழகான நிறத்தையும், மினுமினுப்பையும் பெறும்.
பார்லி மாவில் எலுமிச்சை சாறு, பசும்பால் கலந்து, முகத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.