சி.ஆர்.ஹரிஹரன்
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து பனை வெல்லம் சேர்த்து சூரணமாக சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
உணவில் அடிக்கடி முள்ளங்கி, முருங்கைக் கீரை, நெல்லிக்காய் சேர்த்து வந்தால் கை, கால், பாத வீக்கம் ஏற்படாது. சிறுநீர் தாராளமாக இறங்கும்.
வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி இவற்றைப் பொடியாக நறுக்கி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதிகமாக உண்டாகும் சதை மடிப்புகள் மறையும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் புளிச்ச கீரையை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
அடிக்கடி ஏப்பம் வரும்போது வேப்பம்பூவை தூள் செய்து ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டு சிறிது இஞ்சிச்சாறுடன் கலந்து உட்கொண்டால் குணம் தெரியும்.
ஒரு டம்ளர் எலுமிச்சை பழச்சாறுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
வேர்கடலை சாப்பிடும் போது வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராது.
மாதுளம்பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை குணமாகி விடும்.
நல்லெண்ணெயில் தும்பைப்பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் தலைபாரம் குறையும்.
வெற்றிலையோடு சிறிது சுக்கு, கிராம்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாய்வுப் பிடிப்பு ஏற்படாது. உண்ட உணவு விரைவில் ஜீரணமாகும்.
பிரண்டையை பசுநெய் விட்டு அரைத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
அல்சர் தொல்லை உள்ளவர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.