கே.எஸ்.கிருஷ்ணவேனி
சூரிய ஒளி நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது நம் சருமத்தை இயல்பான நிறத்தில் இருந்து மங்கிப்போக வைக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் 'மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் நம் சருமம் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகள் நிறம் மாறி கருமை அடையும். இதனைப் போக்க:
இரண்டு துண்டு வெள்ளரிக்காயுடன் சிறிது தயிர் கலந்து மிக்ஸியில் அடித்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி விட முகத்தின் கருமை நிறம் மாறி பளிச்சிடும்.
ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து 2 ஸ்பூன் அளவில் பவுடர் எடுத்து அத்துடன் தயிர் கலந்து கை, முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி விட நம் சருமம் பொலிவு பெறும்.
கற்றாழை சாற்றுடன் சிறிது தேங்காய்ப் பால் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவ வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறி பளிச்சிடும்.
அன்னாசிப் பழத்தில் இருக்கும் புரோமலைன் என்ற என்சைம் நம் தோலில் உள்ள இறந்த செற்களை நீக்கி பளிச்சென ஆக்கும். எனவே அன்னாசி பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி ஒன்றை எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பளிச்சென மின்னும்.
உருளைக்கிழங்கை அரைத்து அந்த பேஸ்ட்டுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை ஒரு ஸ்பூன் அளவு கலந்து முகம், கழுத்துப் பகுதி கைகளில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விட கருத்த தோல் நிறம் மாறி அழகாக மிளிரும்.
தேன் நம் உடலுக்கு மட்டுமல்ல தோலுக்கும் சிறந்தது. இதனை பப்பாளி சாறு சிறிதுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து அலம்பி விட முகம் பளிச்சென்று மின்னும்.
வெயிலின் புற ஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து விடுபடத் தயிர்,எலுமிச்சை சாறு, தக்காளி, கஸ்தூரி மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, கற்றாழை சாறு ஆகியவை உதவும்.
எலுமிச்சையில் உள்ள Alpha hydroxyl acids, vitamin C நம் கருத்த சருமத்தை நிற மாற்றம் அடையச் செய்யும் சக்தி கொண்டது.
கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அத்துடன் தயிர் சிறிது சேர்த்து நன்கு குழைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ நம் சருமம் நல்ல நிறம் பெறும்.
அதேபோல் தரமான பன்னீருடன் கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு முகம் கழுவ முகம் பளிச்சிடும்.
புளித்த தயிர் ஒரு கரண்டி எடுத்து அதனை முகம், கழுத்து பகுதிகளில் தடவித் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவக் கருமை நீங்கி பளிச்சென மாறும்.