கிரி கணபதி
குழந்தைகளின் தலைமுடி மிகவும் மென்மையானது. அதை ஆரம்பத்திலிருந்தே முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை உறுதி செய்யலாம்.
01. குளிப்பாட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயால் தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டும்.
02. பெரியவர்கள் பயன்படுத்தும் ஷாம்புவை தவிர்க்கவும். குழந்தைகளுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, ரசாயனங்கள் குறைவான Mild ஷாம்புவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
03. குழந்தையின் தலைக்கு ஊற்றும்போது அதிக சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. மிதமான சூடுள்ள நீரையே பயன்படுத்த வேண்டும். அதிக சூடு முடியை வறட்சியடையச் செய்யும்.
04. குளித்த பின் டவல் கொண்டு முடியை வேகமாகத் தேய்க்கக் கூடாது. மென்மையான காட்டன் துண்டால் ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். இதனால் முடி உடைவதைத் தவிர்க்கலாம்.
05. மென்மையான பற்கள் கொண்ட சீப்பு அல்லது அகலமான பற்கள் கொண்ட சீப்பையே பயன்படுத்த வேண்டும். சிக்கு எடுக்கும்போது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக வார வேண்டும்.
06. குழந்தையின் தலையில் செதில்கள் இருந்தால், எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் மெதுவாக சீப்பால் நீக்க வேண்டும். நகத்தால் சுரண்டக் கூடாது.
07. பெண் குழந்தையாக இருந்தால், தலைமுடியை மிகவும் இறுக்கமாகப் பின்னவோ அல்லது ரப்பர் பேண்ட் போடவோ கூடாது. இது முடியின் வேர்களைப் பாதிக்கும். தளர்வாகவே பின்ன வேண்டும்.
08. அவ்வப்போது முடியின் நுனியை லேசாக வெட்டி விடுவது நல்லது. இது முடி பிளவுபடுவதைத் தடுத்து, முடி ஒரே சீராகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும்.
09. குழந்தையின் உணவுப் பழக்கம் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
10. குழந்தை படுக்கும் தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைக்க வேண்டும். அழுக்கான உறைகள் மூலம் தலைமுடியில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், உங்கள் குழந்தையின் முடி பட்டுப்போல மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.