எஸ்.விஜயலட்சுமி
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில தவறான செயல்களே முடி உதிர்விற்கு காரணமாகி, ஆரோக்கியமற்ற கூந்தலுக்கு வழிவகுக்கின்றன.
பெரும்பாலானவர்கள் தலைக்கு ஷாம்புதான் பயன்படுத்துகிறார்கள். ஷாம்பு ஏற்கனவே ரசாயனம் நிறைந்தது. தலைமுடியில் இருக்கும் அழுக்கு போகவேண்டும் என்பதற்காக அதிகளவு ஷாம்பு போடக்கூடாது. தினமும் ஷாம்பு போட்டு குளிப்பது கூடாது. இது முடியில் உள்ள சத்துக்களை நீக்கி, வலுவற்றதாக்கும்.
நீச்சல் குளங்களில் குளோரின் கலந்திருப்பார்கள். அதில் குளிக்கும்போது தலைமுடியில் குளோரின் கலந்து பாதிப்பு ஏற்படுத்தும். எனவே மறக்காமல் தலைக்கு ஷவர்கேப் போட்டுக் கொண்டுதான் குளிக்கவேண்டும்.
இறுக்கமாக பின்னல் போடக்கூடாது. அது தலைமுடி உதிர வழிவகுக்கும். அதேபோல லூசாக ஃப்ரீஹேர் விடுவதும் சிக்கலை ஏற்படுத்தும். எப்போதும் ஒரே மாதிரி ஹேர் ஸ்டைலும் கூடாது. தளர்வான பின்னல் அல்லது தளர்வான போனி டெயில் போடுவது நன்று.
சூடான தண்ணீரில் குளிக்கக் கூடாது. அது தலைமுடியை பாதிக்கும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீர் சிறந்தது.
தலை முடியில் இருக்கும் நரை முடிகளை தேடிப் பிடித்து நீக்குவது மிகத் தவறு. அதேபோல பிளவுபட்ட முடி நுனிகளை அவ்வப்போது ட்ரிம் செய்வது நல்லது. அப்போதுதான் முடி நன்றாக செழித்து வளரும்.
ஈரத்தலையுடன் தூங்குவது மிகத்தவறு. ஈரத்தலைமுடி மிக எளிதில் உடைந்து போகும். எனவே நன்றாக காயவைத்த பின்பு உறங்கச் செல்ல வேண்டும்.
அடிக்கடி நாம் உபயோகிக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்களை கிளீன் செய்ய வேண்டும். அதில் தங்கியிருக்கும் அழுக்கு, பொடுகு மற்றும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும்போது முடிக்கு பாதிப்பை உண்டாக்கும்.
சத்தற்ற உணவுகளை உண்பதும் தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும். சமச்சீரான மற்றும் விட்டமின் ஏ, சி, டி, ஜிங்க், இரும்பு பயோட்டின் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே முடி ஆரோக்கியம் மேம்படும். அதேபோல போதிய அளவு நீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதும் அவசியம்.
கண்டிஷனரை தலைமுடியில் நீண்ட நேரம் வைத்திருப்பது முடிக்கு தீங்கு செய்யும். கண்டிஷனர் முடியை மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கத்தான் உதவுகிறது. ஆனால் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அது எதிர்வினை புரியும்.
வெயிலில் அதிகமாக அலைந்து திரியும்போது புற ஊதாக்கதிர்கள் முடியை பாதிக்கும். எனவே வெளியில் செல்லும்போது தலையில் தொப்பி அணிந்து செல்வது முக்கியம். அதேபோல ஃப்ரீஹேர் விடுவதும் தலைமுடியை சிக்காக்கும்.
அதிகளவு கவலை, மன அழுத்தம் போன்றவை முடி உதிர்வுக்கு வழிபடும். குறைந்த அளவு தூங்குவதும் ஒருவருக்கு தலைமுடி உதிர்வை அதிகரிக்கும்.
தலைமுடிக்கு நல்ல தரமான சீப்புகளை உபயோகிக்க வேண்டும் மிகவும் முரட்டுத்தனமான பிளாஸ்டிக் குச்சங்கள் தலைமுடியை துண்டிக்கும்.
கெமிக்கல் டை கூடாது. இயற்கையான டையை உபயோகிப்பது நல்லது. தலையில் அழுக்கு, பொடுகு பேன் போன்றவை முடி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இனிமேலாவது இதுபோன்ற தவறுகளை தவிர்த்து, முடியை நன்றாக பரமாரியுங்கள்.