கே.எஸ்.கிருஷ்ணவேனி
இரண்டு பாதாம் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள தழும்புகள் காணாமல் போகும்.
ஆரஞ்சு பழத்தோல், பப்பாளி பழத்தோல் போன்றவற்றை அரைத்து சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென மின்னும்.
துளசி இலையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு கையால் கசக்கி அதனை தேமல் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.
தேவையான உறக்கம் இல்லை என்றால் முகம் டல்லாக இருக்கும். இதற்கு வெள்ளரி விதைகளை சிறிது பால் விட்டு அரைத்து குடிக்கலாம்.
கசகசாவை சிறிது நேரம் பாலில் ஊறவிட்டு விழுதாக அரைத்து அரை ஸ்பூன் அளவு ஒரு கப் பாலில் கலந்து பருக நல்ல தூக்கம் வரும்.
வாழைப்பழத்தோல் ஒன்று, உருளைக்கிழங்கின் தோல் ஒன்றை சீவி இரண்டையும் சேர்த்து ரெண்டு கப் நீரில் கொதிக்க விட்டு நன்கு ஆற விடவும். இதனைக் கொண்டு முகம் கழுவ தழும்புகள், கரும்புள்ளிகள் மாறி முகம் பளிச்சென மின்னும்.
ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் கலந்து முகத்தில் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட முகம் பிரகாசமாகும்.
பப்பாளி பழம் ஒரு தூண்டுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு குழைத்து, சிறிதளவு தேன், அரை ஸ்பூன் அரிசி மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பொலிவாகும்.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்த தொப்பை குறைந்து ஃபிட்டாகலாம்.
தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உண்டு. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ முகம் பிரகாசமாக மின்னும்.
முகக் கருமை நீங்க சர்க்கரையுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சிடும்.
ஓட்ஸ், தேன் போன்றவை முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெய்களை நீக்கிவிடும். ஓட்ஸை நீர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
முடி கொட்டுவதை தவிர்க்க மயிர் கால்களை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். தேங்காய்ப் பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க முடி கொட்டுவது நிற்கும்.
உடல் உஷ்ணம் மிகுந்தாலும் முடி கொட்டும். இதற்கு இரவில் படுக்கப் போகும் சமயம், நல்லெண்ணெயை சிறிது எடுத்து உள்ளங்கால்களில் தேய்த்து மசாஜ் செய்ய உடல் உஷ்ணம் குறையும்.
ஊட்டச்சத்து குறைந்தால் முடி கொட்டும். இதற்கு இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை நம் உடலுக்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் பலம் சேர்க்கும்.
ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தலைமுடிக்கு மயிர்கால்கள் முக்கியம். நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பாக மயிர்க் கால்களில் தடவி மசாஜ் செய்ய நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.