கே.எஸ்.கிருஷ்ணவேனி
Millipedes என்ற சொல் லத்தீனிலிருந்து வந்த சொல்லாகும். இதற்கு ஆயிரம் கால்கள் என்று பொருள்.
மரவட்டைகள், பூரான் போன்றவை கணுக்காலி குழுவைச் சேர்ந்த பல கால் உயிரினங்களாகும். மரவட்டைகள் (millipedes) நீண்ட உருளை வடிவான உடலமைப்பை கொண்டவை. இவை தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை.
பொதுவாக, மரவட்டைகளுக்கு சரியாக 1000 கால்கள் இருக்குமா? என்றால் சொல்லமுடியாது. IIIacme plenipes எனும் அரிய வகை மரவட்டை 750 கால்கள் வரை கொண்டதாக அறியப்படுகிறது.
மரவட்டைகளில் சுமார் 12000 சிற்றினங்கள் இருப்பதாக அறியப்படுகின்றன. பெரும்பாலான மரவட்டைகள் இறந்த தாவரப் பகுதிகளையும், மக்கும் இலைகளையும், சில பூஞ்சைகளையும் சாப்பிடக் கூடியவை.
பெரும்பாலான மரவட்டைகள் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களை சுரக்கின்றன.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மரவட்டைக்கு 1306 கால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் கனிமப் பொருள் ஆய்வு நடத்த தோண்டப்பட்ட ஒரு சுரங்க பகுதியில் 60 மீட்டர் ஆழம் கொண்ட குழியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் மில்லிபீட் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நீளமான பார்வையற்ற மில்லி பீட் 1306 நூல் போன்ற வெள்ளை நிற கால்களைக் கொண்டது. கூம்பு வடிவ தலை, கொக்கு வடிவ வாய், பெரிய கொம்புகளைக் கொண்ட இதற்கு கண்கள் இல்லாததால் அதன் சூழலை உணர தொடுதல் மற்றும் வாசனை போன்ற புலன்களை பயன்படுத்துகின்றன.
இவை அழுகும் தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளை உண்கின்றன. இந்த உயிரினம் அறிவியல் ரீதியாக Eumillipes Persephone என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்கள் கிட்டத்தட்ட 200 அடி (60 மீட்டர்) நிலத்தடியில் வாழ்ந்தன.
ஆண் மில்லிபீட்ஸ்களை விட பெண் மில்லிபீட்ஸ்களுக்கு அதிக கால்கள் இருந்தன. இந்த இனம் மண்ணில் அதிக ஆழத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு வறண்ட மற்றும் கடுமையான நிலப்பரப்பில் காணப்பட்டன.
சுரங்கத் தொழிலாளர்கள் தங்கம் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பிற கனிமங்களை தோண்டி எடுக்கும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இவையே உலகில் அதிகமான கால்களைக் கொண்ட உயிரினமாகும்.