ஆர்.கீதா
வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் விட்டுக் காய்ந்த பின் கடலை மாவு கொண்டு கழுவிவிட முகத்தில் உள்ள புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.
தேங்காய்ப்பாலுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஜா இதழ் பவுடர் கலந்து முகம், கழுத்து, கை பாதங்களில் தடவி, நன்கு காய்ந்தவுடன் கழுவ பளீர் நிறம் கிடைக்கும்.
ஒரு தேக்கரண்டி துளசி இலையின் சாற்றுடன் அரைக்கரண்டி தேன் கலந்து, தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தோல் மினு மினுப்பாக மாறும்.
பப்பாளிப் பழச்சாறுடன் காய்ச்சாத சாதாரணப்பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து, நன்றாக பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மீது போட்டு வந்தால், ஆரம்ப நிலையில் இருக்கும் முகச்சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
கிளிசரினும், தேனும் கலந்து முகத்தில் தடவிக் கொஞ்ச நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் முகம் அலம்பினால், முகம் இளமையாகவும், வசீகரமாகவும் மாறும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக அரிந்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகம், கை, பாதங்களில் 'பேக்' போட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின் கழுவினால் சருமம் பளிச்சென்று ஆகி விடும்.
முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால் தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறைந்து விடும்.
முடி அடர்த்தியாக வளர வேண்டுமானால், கொண்டைக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் கால் டேபிள் ஸ்பூன் எடுத்து, இரண்டையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் தோலுடன் அரைத்து, தலையில் தேய்த்து நீர் விட்டு அலசவும். இதில் புரதச்சத்து இருப்பதால் முடி அடர்த்தியுடன் வளரும்.
சிறிதளவு பால் மற்றும் ஒரு தேக்கரண்டி காலிஃப்ளவர் சாறு, ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி பத்து நிமிடம் கழித்து, முகத்தை நன்றாகக் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாகும்.