வாசுதேவன்
1877ஆம் ஆண்டு முதல் விம்பிள்டன் சாம்பியன் ஸ்பென்சர் கோரே. 1884ல் வென்ற முதல் பெண்சாம்பியன் மௌட் வாட்சன்.
அதே வருடத்தில் முதல் இரட்டையர் ஜோடி வென்றனர் எர்னஸ்ட் ரேன்ஷா, வில்லியம் ரேன்ஷா.
புகழ் பெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நான்கு டென்னிஸ் போட்டிகளை உள்ளடக்கியது. அவை பிரெஞ்சு ஓபன், யூஎஸ் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் விம்பிள்டன்.
இந்த நான்கில், விம்பிள்டன் மட்டும்தான் புல் தரையில் விளையாடப்படுகிறது. (விம்பிள்டன் (Wimbledon) என்பது இடத்தின் பெயர்)
பல வருடங்கள் வெள்ளை டென்னிஸ் பந்துக்கள் உபயோகிக்கப்பட்டு வந்தன. 1986ல் இருந்து மஞ்சள் நிற பந்துக்கள் உபயோகத்தில் உள்ளன.
விம்பிள்டன் போட்டிகளில் 54000க்கும் அதிகமான தனிப்பட்ட பந்துக்கள் ஒவ்வொரு வருடமும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பல வீரர்கள், வீராங்கனைகள் வென்று சரித்திரம் படைத்துள்ளனர். பில்லி ஜீன் கிங் என்ற வீராங்கனை தனது 17வது வயதில் இரட்டையர் பட்டம் வென்று அசத்தியவர்.
போரிஸ் பெக்கர் ஒற்றையர் பட்டம் பெற்றபொழுது அவரது வயது 17.
அதிக நேரம் எடுத்துக்கொண்ட மேட்ச் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (John Isner), பிரெஞ்சு வீரர் நிக்கோ லாஸ் மஹுட் (Nicholas Mahut) இடையேயானதாகும். 11 மணி 5 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட ஆட்டம் மூன்று தினங்கள் தொடர்ந்தது.
அதி வேகமான சர்வ் செய்த பெருமைக்கு உரியவர் டைலர் டென்ட் (Tylor Dent) என்ற வீரர். 147 மைல்கள் வேகம் கொண்டிருந்தது அவரது சர்வ் .
வீராங்கனைகளில் வீனஸ் வில்லியம்ஸ் 129 மைல்கள் வேகத்தில் சர்வீஸ் சாதனை புரிந்துள்ளார்.
போட்டி முடிவில் ஆட்டத்தில் வென்ற ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசாக முறையே கோப்பை, தட்டு வழங்கப்படுகின்றது.
இந்தக் கோப்பையில் ஒரு வரி பொறிக்கப்பட்டு இருக்கும் - The All England Lawn Tennis Club Single Handed Champion of the World. கோப்பையின் மேலே ஒரு அன்னாசி பழ உருவம் வைக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான போட்டி முடிவில் வென்ற வீராங்கனைக்கு அளிக்கப்படும் பரிசு ஸ்டர்லிங் வெள்ளியில் (sterling silver) ஒரு தட்டு. இதற்கு பெயர் ரோஸ் வாட்டர் டிஷ். (Rosewater Dish)
2007ம் வருடத்தில் இருந்துதான் பரிசு தொகை சமமாக அளிக்கப்படுகின்றது.