கிரி கணபதி
விசேஷங்களோ, பண்டிகைகளோ... கைகளில் மெஹந்தி போடுவது பெண்களுக்கு எப்போதுமே அலாதியான ஆனந்தம் தான். ஆனால், அது அழகாகச் சிவக்க வேண்டும் என்றாலும், சருமத்திற்குப் பாதிப்பு வரக்கூடாது என்றாலும் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் இதோ.
1. மெஹந்தி போடுவதற்கு முன் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவி ஈரம் போக உலர வைக்க வேண்டும். கைகளில் எண்ணெய் அல்லது பாடி லோஷன் இருந்தால் மெஹந்தி சருமத்தில் ஒட்டாமல் நிறம் மங்கிவிடும்.
2. ஐந்து நிமிடத்தில் சிவக்கும் என விற்கப்படும் கெமிக்கல் மற்றும் 'பிளாக் மெஹந்தி' கோன்களை அறவே தவிருங்கள். இவற்றில் உள்ள ஆபத்தான ரசாயனங்கள் கைகளில் அரிப்பையும் நிரந்தரமான தழும்புகளையும் ஏற்படுத்திவிடும்.
3. புதிதாக ஒரு பிராண்ட் மெஹந்தி வாங்கினால், அதை முதலில் உள்ளங்கையில் ஒரு சிறிய புள்ளியாக வைத்துச் சோதியுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அரிப்போ அல்லது எரிச்சலோ இல்லை என்றால் மட்டுமே முழு கைகளுக்கும் போடுங்கள்.
4. மெஹந்தி லேசாகக் காயத் தொடங்கியதும், எலுமிச்சைச் சாறும் சர்க்கரையும் கலந்த கலவையைப் பஞ்சால் ஒற்றி வையுங்கள். இது மெஹந்தி காய்ந்து உதிர்ந்து விடாமல், நீண்ட நேரம் கைகளிலேயே ஒட்டியிருக்கப் பெரிதும் உதவும்.
5. மெஹந்தி காய்ந்ததும் அதைச் சுரண்டி உதிர்க்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தண்ணீரால் கழுவக் கூடாது. குறைந்தது அடுத்த 6 முதல் 8 மணி நேரத்திற்குக் கைகளில் சோப்போ அல்லது தண்ணீரோ படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
6. காய்ந்த மெஹந்தியை உதிர்த்த பிறகு, கைகளில் 'விக்ஸ்' அல்லது யூகலிப்டஸ் எண்ணெயைத் தடவுங்கள். இவை உருவாக்கும் லேசான வெப்பம் மெஹந்தியின் நிறத்தை இன்னும் அடர்த்தியான கருஞ்சிவப்பாக மாற்றிக் காட்டும்.
7. மெஹந்தி போட்டுக் கொண்டு ஏசி அறையிலோ அல்லது அதிவேக ஃபேன் காற்றிலோ உட்காருவதைத் தவிருங்கள். குளிர்ந்த காற்று மெஹந்தியைச் சீக்கிரம் உலர வைத்தாலும், அது நிறத்தை முழுமையாகச் சருமத்தில் இறங்க விடாது.
8. கைகளுக்கு வேக்சிங் அல்லது மெனிக்யூர் செய்வதாக இருந்தால், அதை மெஹந்தி போடுவதற்கு முன்பே முடித்துவிடுங்கள். மெஹந்தி போட்ட பிறகு கைகளில் ஸ்க்ரப் செய்தால் அதன் அழகான நிறம் உடனடியாக வெளுத்துவிடும்.
9. மெஹந்தி நல்ல நிறத்தில் மாற வேண்டும் என்றால், அது குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது கைகளில் இருக்க வேண்டும். எனவே இரவு நேரத்தில் போட்டுவிட்டு, மறுநாள் காலையில் உதிர்ப்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.
10. இயல்பாகவே உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்களுக்கு மெஹந்தி மிக எளிதில் அடர்த்தியாகச் சிவந்துவிடும். எனவே மெஹந்தி போடும் அன்று அதிக குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்து, உடலைச் சற்று வெதுவெதுப்பாக வைத்திருங்கள்.
இந்தப் பத்து விதிகளை ஃபாலோ பண்ணுங்க, உங்க மெஹந்தியோட கலரைப் பார்த்து ஊரே கண்ணு வைக்கிற அளவுக்குக் கெத்து காட்டுங்க.