கே.எஸ்.கிருஷ்ணவேனி
Charles Darwin Frog: தலைகீழாக நின்று முட்டையிடும் தவளை: உலகில் கிட்டத்தட்ட 7,708 தவளை இனங்கள் உள்ளன. அந்தமானில் உள்ள சில தீவுகளில் மட்டும் தனித்துவமான தவளை இனம் ஒன்று தலைகீழாக நின்று முட்டையிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரின் நினைவாக இது 'சார்லஸ் டார்வின்' என்று பெயரிடப்பட்டது.
அவை டாட்போல் (tadpole) நிலையை எட்டி தண்ணீரில் சுதந்திரமாக நீந்தத் தொடங்குகின்றன. வேறு எந்தத் தவளை இனமும் இப்படி தலைகீழாக நின்று முட்டை இடுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) 'பாதிக்கப்படக்கூடியது' என பட்டியலிப்பட்டுள்ளது.
ஹே...ஹே...(Aey Aey): கூப்பிடுவதற்கு மிகவும் வசதியான பெயர். பார்வைக்கு சாத்தானின் மினியேச்சர் போல் காணப்படும் இந்த விலங்கு உண்மையில் ரொம்பவும் சாது. மரங்கொத்திக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டுமே உணவுக்காக மரத்தைக் கொத்தி துளை உண்டாக்கி புழுவை பிடித்து உண்ணும். பற்களினால் மரத்தை கடித்து துளை ஏற்படுத்தி விரல்களால் கிளறி பூச்சியை பிடித்து உண்ணும்.
மடகாஸ்கர் பகுதியில் ஹே ஹே என்றால் 'எனக்குத் தெரியாது' என்று பொருள். இவை ராத்திரி எல்லாம் முழித்துக் கொண்டு நைட்ஷிப்ட் பார்த்து விட்டு பகல் முழுவதும் குறட்டை விட்டு தூங்கும். இவை வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிட்னா (Echidna): வித்தியாசமான விலங்குகளின் பட்டியலில் விஞ்ஞானிகளின் பேவரைட் விலங்குகளில் ஒன்று. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். நீண்ட மூக்குடன் எறும்புகளைத் தின்று உயிர் வாழும் விலங்கு. முள்ளம் பன்றி போல் இதன் மேனியெங்கும் குத்தும் முடிகள் நிரம்பியிருக்கும்.
ஃபிரில் கழுத்து ஓணான் (frill garden lizard): கழுத்தை சுற்றி ஃபிரில் இருப்பதால் இப்பெயர் உண்டாயிற்று. ஆஸ்திரேலியாவில் இதை 'பைசைக்கிள் லிசார்ட்' என்று அழைக்கிறார்கள். மூன்றடி நீளம் வரை வளர்ந்து மிரட்டும் அளவில் இருப்பது இதன் பலம்.
மரத்தோடு ஒட்டிக்கொண்டு மரக்கிளையைப் போலவே இருந்து இரையைப் பிடிக்கும். உற்றுப் பார்க்காத வரை இப்படி ஒரு ஓணான் அங்கு இருப்பதே தெரியாது. இவை ஆஸ்திரேலியாவிலும் ஜெனிவாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
Jerboa: ஜெர்போவா மிகவும் அரிய வகை விலங்கு. மங்கோலிய, சீன, ஆப்பிரிக்க வறண்ட பகுதிகளில் அவ்வப்போது தென்படுகின்றன. நீளமான வால், நீண்ட பின்னங்கால்கள் என வியப்பூட்டும் இந்த விலங்கு நடப்பதற்கு முன்னங்கால்களை அதிகம் பயன்படுத்தாமல் கங்காருவைப் போல் தாவித்தாவி ஓடுவது இதன் சிறப்பு. அதிக சூடான பாலை நிலங்கள் தான் இதனுடைய வசிப்பிடம்.
மிகக் கூர்மையாக கேட்கும் திறன் கொண்ட இது எதிரி எத்தனை தொலைவில் இருந்தாலும் மெல்லிய சத்தத்தை கேட்டு உடனே மறைந்து விடும். இவை 6 ஆண்டுகள் வரை வாழும்.
சாய்கா ஆன்டெலோப் (Saiga Antelope): மான்களைப் போல் கொம்புகளையும், மாடுகளைப் போல் காதுகளையும் நீண்ட வளைந்த மூக்கினையும் கொண்ட இவை வெயில் காலத்தில் மண்ணுக்குள் தன் மூக்கை அடிக்கடி புதைத்து வைத்து குளிர் காயும். குளிர்காலத்திலோ காற்றில் இருந்தே வெப்பத்தை எடுக்கும்.
சாய்காவில் ஆண் இனத்துக்கு மட்டுமே கொம்பு உண்டு. இதன் கொம்பை மருத்துவ குணம் மிக்கது என்று கதை விட்டும், இறைச்சிக்காகவும் தேடித்தேடி கொல்வதால் இவை வேகமாக அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. மங்கோலியா, ரஷ்யா, கஸகஸ்தான் போன்ற நாடுகளில் சில பகுதிகளில் வாழ்கிறது.
ஸ்லெண்டர் லாரிஸ் (Slender loris): இவை இந்தியா, இலங்கை சதுப்பு நிலக்காடுகளில் காணப்படுகின்றன. இவை மிகவும் சின்ன உருவம் கொண்ட விலங்கு. பகலில் தூங்கி இரவில் சுற்றித் திரியும்.
வருடத்திற்கு ஒரு முறை தான் குட்டி போடும். பெரும்பாலும் இரட்டைக் குட்டிகளை போடும் என்பது சுவாரஸ்யமானது. இவை உலகின் மற்ற பாகங்களில் காணப்படுவதில்லை.
புரோபோஸ்கிஸ் குரங்கு (Proboscis): சப்பாத்தி மாவை கொஞ்சம் அதிகமாக பிசைந்து தொங்க விட்டது போல் இருக்கும் இதன் மூக்கு. இரண்டரை அடி நீளமும், சுமார் 10 கிலோ எடையும் உள்ள இந்த குரங்குகள் குடும்பம் குடும்பமாக வாழும். தெற்காசியத் தீவான பொரீனோ, இந்தோனேசியா போன்ற சில நாடுகளில் இவை காணப்படுகின்றன.
டார்சியர் (Tarsier): ரொம்ப குட்டியாக இருக்கும் டார்சியரின் ஸ்பெஷலே அதன் கண்கள் தான். இன்னும் சொல்லப்போனால் அதன் கண்ணும் மூளையும் ஒரே அளவு தான். ஒரு காலத்தில் உலகெங்கும் பரவி இருந்த இந்த விலங்கு இப்போது ஆசியாவின் தென்மேற்கு பகுதிகளில் குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன.
இருப்பதே தெரியாமல் பதுங்கி இருந்து ஏதேனும் பூச்சியை கண்டால் தாவி போய் அதன் மீது விழுந்து அதை அமுக்கும் அப்புறம் சாப்பிடும். இவை முழுக்க முழுக்க மாமிசம் உண்ணும் விலங்குகள். முதுகெலும்பில்லாத விலங்குகளை குதித்து பிடித்து உண்ணும். சிறிய பறக்கும் தவளைகள், பல்லிகள், நண்டுகள், கரப்பான் பூச்சிகள் போன்றவை இவற்றின் விருப்பமான இரையாகும்.