தேனி மு.சுப்பிரமணி
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளில் உலக யானைகள் நாள் (World Elephant Day) கொண்டாடப்படுகிறது. உலகத்தில் யானைகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட 65 அமைப்புகள் மற்றும் யானைகள் இருக்கும் நாடுகளில் யானைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வில்லியம் சாட்னர் என்பவர் 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படம் ஒன்றை எடுத்தார். இந்தப் படமானது, ஒரு தனியார் வளர்க்கும் யானையை, மீண்டும் காட்டிற்குள் கொண்டு போய் விடுவது பற்றிய கதையைக் கொண்டிருந்தது. இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாளில் வெளியானது. அன்றிலிருந்து 'உலக யானைகள் நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது.
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் அனைத்திலும் மிகப் பெரியதும், மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும்.
யானைகளில், ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்று மூன்று சிற்றினங்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
ஆண் யானையை களிறு என்றும், பெண் யானையை பிடி என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர்.
யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. யானையின் தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.
ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்.
இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது.
நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.
தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கவை.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன.
யானையின் கருக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட கருக்காலம் ஆகும்.
பிறந்த யானைக் கன்றானது 90 முதல் 115 கிலோ கிராம் எடை வரை இருக்கும். யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.
‘சாஸ்தவிந்தே மேளம்’ என்று அழைக்கப்படும் விழாவின் ஒரு பகுதியாக, தாளக் குழுக்கள் மற்றும் அலங்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கேரளாவில் பல கோயில்களில் பூரத்தின் போது யானைகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றன.
2002 ஆம் ஆண்டு முதல் அசாம் மாநில வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து, ஒவ்வோர் ஆண்டும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், காசிரங்கா யானைத் திருவிழா நடத்தப்பெறுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரு தசரா திருவிழாவில் விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. முன்னணி யானை சாமுண்டேசுவரி தேவியுடன் தங்க அம்பாரியைச் சுமந்து செல்கிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள செய்ப்பூர் நகரில், ஹோலி பண்டிகை திருவிழாவில் யானைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் யானையின் போலோ விளையாட்டும், யானை நடனமும் இடம் பெறுகின்றன.
தமிழ் மொழியில், யானை குறித்து பல பழமொழிகளும், சொலவடைகளும் இருக்கின்றன.