நான்சி மலர்
சில மரங்கள் முழுமையாக மனிதர்களுக்கென்றே தங்களை அர்ப்பணித்துக்கொள்கின்றன. உதாரணத்திற்கு, தென்னை, வாழை மரங்களை சொல்லலாம். இந்த வகை மரங்களில் காய், கனி, இலை என்று அனைத்து பாகங்களும் மக்களுக்குப் பயன்படுகின்றன.
அதுபோலவே எல்லா வகையிலும் பயன்படும் அதிசய மரம் ஒன்று ஆப்பிரிக்காவில் உள்ளது. ‘ஜீவ விருட்சம்’ என்று ஆப்பிரிக்க மக்களால் அன்பாக அழைக்கப்படும் மரத்தின் பெயர்தான் பாவோபாப் மரமாகும்(Baobab tree).
இந்த மரம் 200 மில்லியன் வருடங்களாகவே பூமியில் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆப்பிரிக்காவில் உள்ள வறண்ட பகுதியான சவானாவை பூர்வீகமாகக்கொண்ட பாவோபாப் மரம் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.
இந்த மரம் சதைப்பற்றுடன் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீரைத் தன்னுள் தேக்கி வைத்து கொள்கிறது.
இதனால் தண்ணீர் இல்லாத காலங்களில் ஆப்பிரிக்க மக்கள் இந்த மரத்தினுள் சிறிது துளையிட்டு அதிலிருக்கும் நீரை எடுத்து அருந்துவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பாவோபாப் மரத்தில் உள்ள பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. இந்தப் பழம் வறட்சியான காலங்களில் காய்ப்பதால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
பாவோபாப் மரம் 32 ஆப்பிரிக்க நாடுகளில் வளர்கிறது. இந்த மரம் 5000 வருடங்கள் வாழக்கூடியது. இதன் உயரம் 30 மீட்டரும், அகலம் 50 மீட்டரும் ஆகும்.
இந்த மரம் மனிதர்களுக்கும், மிருகத்திற்கும் உணவு, தண்ணீர், தங்குவதற்கான இடத்தை வழங்குகிறது. அதனால்தான் சவானா மக்கள் இந்த மரத்தின் அருகிலேயே தாங்கள் தங்கும் இடத்தையும் அமைத்துள்ளனர்.
இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது. இதனுடைய மரப்பட்டை கயிறு மற்றும் ஆடை செய்வதற்குப் பயன்படுகிறது.
இதனுடைய விதை அழகுசாதன எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது, இதனுடைய இலையை சூப் செய்து சாப்பிடுகிறார்கள்.
பழத்தில் அதிக சத்துக்களும் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க பெண்கள் இந்த பாவோபாப் பழத்தை தங்கள் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே பாவோபாப் பழம் மட்டும்தான் கிளையில் இருக்கும்போதே காய்ந்து போகும் தன்மையை உடையது. மற்ற பழங்களை போல கீழே விழுந்து உடைந்து போகாமல் 6 மாத காலம் மரத்திலேயே இருந்து காய்ந்துபோகிறது.
பழங்கள் காய்ந்துபோனதும், தேங்காய்போல ஓடுகள் உருவாகும். இந்த சமயத்தில் காயை பறித்து அதன் விதையை அரைத்து மாவாக்க வேண்டும். பாவோபாப் பவுடரில் விட்டமின் சி, 50% நார்ச்சத்து, அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இதை அருந்துவதால் சோர்வு நீங்கும். நோயிலிருந்து பாதுகாக்கும். இளமையாக வைத்திருக்கும்.
இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் கிண்டூர் என்னும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பாவோபாப் மரம் ஒன்று உள்ளது. இதை அங்குள்ள மக்கள் ‘பாரிஜாத மரம்’ என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் மத்திய பிரதேசத்திலும் மண்டு என்னும் இடத்தில் இந்த பாபோபாப் மரம் வளர்ந்திருக்கிறது. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க வியாபாரிகளால் இங்கே கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணர் இந்த மரத்தை சத்திய பாமாவிற்காகவும், ருக்மணிக்காகவும் கொண்டு வந்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. அர்ஜூனன் இந்த மரத்தைச் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், குந்திதேவி இந்த மரத்தில் பூக்கும் மலர்களைச் சிவபெருமானுக்கு சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.