கே.எஸ்.கிருஷ்ணவேனி
பூமியில் மிக வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில். சீனாவில் உள்ள மூங்கில்கள் ஒரே நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை கூட வளரும். மூங்கில் நடவு செய்த பிறகு மூன்று வருடங்கள் கழித்து அருகருகில் நிறைய இளம் குருத்துகள் தோன்றும்.
ஒரு அடி உயரம் வளர்ந்தவுடன் இவற்றை அறுவடை செய்து விடுவது நல்லது. அப்போதுதான் அவற்றில் நச்சுத்தன்மையும், கசப்பு தன்மையும் மிகவும் குறைவாக இருக்கும்.
பச்சை நிறத்தில் வானுயர வளரும் மூங்கில் மரங்கள் 'ஏழைகளின் மரம்' என்றும் 'பச்சை தங்கம்' என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை.
மூங்கில் குருத்துகள் அதிக சத்தானவை. புதியதாகவும், புளிக்க வைக்கப்பட்டும் கேனில் அடைக்கப்பட்டும் கிடைக்கின்றன.
மூங்கிலில் ஏறக்குறைய 1450 வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் அனைத்துமே சாப்பிடக் கூடியவை என்று சொல்லப்பட்டாலும் சில வகை மூங்கில் குருத்துகளில் கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.
பல ஆசிய நாடுகளில் முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருவதுடன் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் வசிக்கும் திவா, தாடு, போடோ போன்ற மலைவாழ் மக்களின் முக்கிய உணவாகவும் இருந்து வருகிறது இந்த மூங்கில் குருத்து.
பாரம்பரிய சீன மருத்துவத்தில் காய்ச்சல், சளி, நுரையீரல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் பலவற்றிற்கு மூங்கில் குருத்து சிறந்த மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இவற்றை வேக வைத்தோ அல்லது புளிக்க வைத்தோ சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது.
இவற்றில் அதிக கொழுப்போ, கலோரிகளோ கிடையாது. இவை பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இதனை உட்கொள்வதால் உடல் பருமன் குறையும். நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.
மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது. குடல் இயக்கங்களை சீராக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டிபயாட்டிக். நுரையீரல் சார்ந்த ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.
மலைவாழ் மக்கள் பக்குவமாக புளிக்க வைத்து, வேக வைத்து, பக்குவப்படுத்தி காய்கள் மற்றும் இறைச்சி உணவுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுகிறார்கள். புளித்த குருத்துகளை நன்கு உலர வைத்து பதப்படுத்தி தேவைப்படும் சமயங்களில் எடுத்து சமைக்கிறார்கள்.
மூங்கில் குருத்தில் எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை செய்யும் சத்துக்கள் உள்ளனவோ அதைவிட அதிக அளவில் உடலுக்கு ஒவ்வாமையும், சில தீய விளைவுகளையும் ஏற்படுத்தும் பலவகையான நுண் பொருட்கள் இருக்கின்றன.
எனவே மூங்கில் குருத்தை உப்பு கலந்த நீரில் 20 நிமிடங்கள் வேகவைத்து நீரை வடித்து பிறகு சுத்தமான நீர் கொண்டு மீண்டும் சில நிமிடங்கள் வேக வைத்து உணவில் சேர்க்க அப்போதுதான் இவை முழு பாதுகாப்பான உணவாக இருக்கும்.
தேனில் ஊற வைத்த மூங்கில் குருத்து: பதப்படுத்தப்படாத தேன் மற்றும் மூங்கில் குருத்துகள் கொண்டு சிறந்த ஆரோக்கியத்தை பெறலாம். இவை எலும்புகளை உறுதியாக்கும். நாளொன்றுக்கு இரண்டு மூங்கில் குருத்து துண்டுகளை தேனுடன் சேர்த்து இரு முறை காலை மாலை என சாப்பிட்டு வர சிறந்த ஆரோக்கியம் பெறலாம்.
இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது: குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளக்கூடாது. தாய்ப்பால் தரும் பெண்களும் மூங்கில் குருத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.