கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஆப்பிரிக்க தவளைகள் கத்தினால் ஒரு மைல் தூரம் கூட கேட்கும்.
தவளைகள் நிலம், நீர் என இரண்டு பகுதிகளிலும் வாழும் உயிரினம். இதன் சருமம் எப்பொழுதும் பளபளப்பாகவும் ஈரமாகவும் இருப்பதற்காக சளி போன்ற திரவத்தை சுரக்கிறது.
சருமம் காற்றையும், நீரையும் கிரகித்துக் கொள்வதால் தவளை வாய் மூலம் நீர் அருந்துவது கிடையாது.
குளிர்காலத்தில் அசைவற்று உடல் செயல்களை நிறுத்தி மாதக்கணத்தில் தூங்கும். அந்த சமயத்தில் அதன் உடலில் 65 சதவீதம் ரத்தம் உறைந்து விடுவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். சில தவளை இனங்கள் மட்டும் குளிர் குறைந்த இடம் நோக்கி சென்று விடும்.
நீண்ட குளிர்கால உறக்கத்திற்குப் பிறகு வெளிவரும் தவளைகள் இடைவிடாது கத்துகின்றன. மழை பெய்தவுடன் கொட்ட கொட்ட விழிக்கும் தவளைகள் 'கரக் க்ரக்' கென்று சத்தம் எழுப்புகின்றன.
இந்த சத்தம் மற்ற தவளைகளுடன் தொடர்பு கொள்வதற்காக எழுப்பப்படுகிறது. சில சமயம் எதிரிகளின் நடமாட்டத்தை தெரிவிக்கவும் கத்துகின்றன.
இவை தன் இருப்பிடத்தை பாம்புகளுக்கு காட்டிக் கொடுக்கிறோம் என்பதை அறியாமலேயே கத்தி மாட்டிக் கொள்கின்றன. இதைத்தான் 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பார்கள்.
மழைக்காலம் தவளைகளின் இனப்பெருக்க காலமாகும். ஆண் தவளைகள் பெண் தவளையை ஈர்க்க இவ்வாறு கத்துகின்றன. எந்த தவளை அதிக சத்தத்துடன் கத்துகிறதோ அந்த தவளையைத் தான் பெண் தவளை நாட முடிவு எடுக்கும்!
தவளைகள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்.
ஆண் தவளை தாடையின் கீழ் உள்ள பை போன்ற அமைப்பை பலூன் போல் ஊதி பெருக்கி ஒலி எழுப்பும். தமிழ் இலக்கிய பாடல்களில் கூட கார்காலத்தை அடையாளம் காட்டும் பொழுது தவளைகள் கத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் நீர் தேங்கும். அப்பொழுது பெண் தவளைகள் இடும் முட்டைகளை ஆண் தவளைகள் கருவுறச் செய்யும். சினை முட்டைகள் நீரில் மிதக்கும்.
முட்டைகள் பொரிந்து தலைப்பிரட்டை (tadpole) உருவாகும். பின்னர் அது வளர்ந்து தவளையாக மாறும்.
வளர்ந்த தவளைகள் நன்னீரிலும், வறண்ட நிலத்திலும் வாழும். சில தவளையினங்கள் மரத்திலும், தரைக்கடியிலும் வாழும். தவளைகள் சிறுசிறு பூச்சிகளையும், நண்டுகளையும், சிலந்தி, புழுக்கள் ஆகியவற்றையும் உண்கின்றன.
பல தவளைகள் தங்கள் இரையைப் பிடிக்க அவற்றின் ஒட்டும் நாக்கை பயன்படுத்துகின்றன. மற்றவை அவற்றை வாயால் பிடித்து உண்கின்றன.