வாசுதேவன்
ஜெர்சி மாடுகளின் பூர்வீகம் இங்கிலிஷ் கால்வாயில் உள்ள ஜெர்சி தீவு ஆகும். சில நூற்றாண்டுகள் கலப்பினம் இல்லாமல் தூய்மையான ஜெர்சி இனமாக பாதுகாக்கப்பட்டன.
இவற்றைப் பாதுகாக்க தனி சட்டங்களும் அமலில் இருந்தன. காலப் போக்கில் பொருளாதார ரீதியாக இந்த இன மாடுகள் பல்வேறு தேசங்களுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டன.
தற்பொழுது பெரும் பாலான இடங்களில் கலப்பின ஜெர்சி மாடுகளே உள்ளன. இவை கறவை மாடுகளின் இனம் ஆகும். இவை அதிக அளவு பால் உற்பத்தி செய்ய உதவுகின்றன.
தூய ஜெர்சி பசு நாள் ஒன்றிற்கு 20 லிட்டர் பால் கறக்கும் திறமை உடையது. ஆனால் கலப்பின ஜெர்சி பசு 8 - 10 லிட்டர் தான் பால் கொடுக்கும்.
நாட்டு பசுக்களை விட அதிக அளவு பால் கறக்கும் திறன் உடையவை ஜெர்சி பசுக்கள்.
ஜெர்சி பசுக்கள் குட்டையாகவும் சிறிதாகவும் இருக்கும். உயரம் 115 - 120 செ மீ. 400 - 500 கிலோ எடை இருக்கும். காளை மாடுகள் 600 - 750 கிலோ இருக்கும்.
ஜெர்சி மாடுகள் லேசான சாம்பல், செம்பட்டை, கருப்பு, பிரவுன் போன்ற நிறங்கள் கொண்டவையாக இருக்கும். உடல் பகுதிகளை விட இடுப்பு, தலை, தோள் பகுதிகளில் அடர்த்தி மிக்க நிறத்தில் காணப்படும்.
இவற்றின் கொம்புகள் குட்டையாகவும், வளைந்தும் காணப்படும். வால்கள் நீண்டும் கருப்பாகவும் தோற்றம் அளிக்கும்.
பிறந்த 26 - 30 மாதங்களில் கன்று ஈனத் தொடங்கும். 13 - 14 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கருத்தரிக்கும்.
இவற்றின் பாலில் கொழுப்பு 5.3%, இதர திட சத்துக்கள் 15% வரையில் இருக்கும். இந்த வகை பசுக்களைப் பராமரிப்பது சுலபம்.
மேய்ச்சல் நிலங்களில் வேகமாகவும், அதிகமாகவும் புற்களை உட்கொள்ளும் திறமை கொண்டவை ஜெர்சி இன மாடுகள்.
இவை எந்த வகை தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைக்கும் ஒத்து போகும் தன்மை உடையது. ஜெர்சி பசுக்கள் சாந்தமானவை, அமையதியானவை.
சற்று வளர்ந்த காளை மாடுகள் கணிக்க முடியாத அல்லது ஆக்ரோஷம் மிக்க பண்புகளைக் கொண்டது. இயற்கையான சூழ்நிலையில் வளர்த்தால் 30 வருடங்கள் வரையில் வாழ்பவை ஜெர்சி இனம்.
இந்த வகை மாடுகளை பால் காய்ச்சல் என்ற நோய் தாக்கும். இவற்றை கட்டுப்படுத்தவும், தவிர்கவும் முடியும்.
ஜெர்சி பசுகளுக்கு தனி மதிப்பும், டிமாண்டும் உண்டு.