நாராயணி சுப்ரமணியன்
கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் குறைவதைப் பற்றியும் கோடைகாலங்களில் வறட்சி ஏற்படுவதைப் பற்றியும் நிறைய விவாதங்கள் எழுகின்றன. அரசுகளும் அமைப்புகளும் நீரை சேமிக்கவும் நீர் சுழற்சியில் ஒரு சமநிலையை ஏற்படுத்தவும் முயற்சிகள் செய்யவேண்டியது அவசியம்.
அதற்கு உதவி செய்வதற்காக சிறுதுளி பெருவெள்ளம் என்ற அளவில் நாமும் சிலவற்றை செய்யலாமே...
பல்துலக்கும் போதும் சவரம் செய்யும்போதும் குழாயை மூடிவிடவும். பல்துலக்குதலும் சவரமும் முடித்த பின்பு குழாயைத் திறந்துவிட்டு நீரைப் பயன்படுத்தலாம்.
வீட்டிலிருக்கும் எல்லா குழாய்களையும் வாரம் ஒரு முறை கவனிக்கவும். ஏதாவது ஒரு குழாய் ஒழுகும்பட்சத்தில் உடனே அதை சரிசெய்யவும். ஐந்து நொடிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் கசிந்தால்கூட ஆண்டுக்கு 315 லிட்டர் நீர் வீணாகும்!
வாகனங்களைக் கழுவும் போது முதலில் பக்கெட் மற்றும் சோப்பு கொண்டு கழுவிவிட்டு நுரைகளை அகற்றும் போது மட்டும் ஹோஸ் பைப் பயன்படுத்தலாம். ஹோஸ் பைப் இல்லாமலேயே வாகனங்களைக் கழுவ முடிகிறதா? சூப்பர்! நீங்கள் 300 லிட்டர் நீரை சேமித்திருக்கிறீர்கள்!
Closing tap waterகுழாய்களை முழுவதுமாக மூடவும். வீட்டில் இருப்பவர்களிடமும் இதை வலியுறுத்தவும்.
நீர் தொட்டி,டேங்க் போன்றவற்றை கவனமாகப் பராமரிக்கவும்.
ஊரில் பொதுக்கிணறுகள், தொட்டிகள், ஏரிகள், குளங்கள் போன்றவை வழக்கப்படி தூர் வாரப்படுகின்றனவா என்று பார்க்கவும். இல்லா விட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லவும்.
சமையலறையிலிருந்து வரும் கழிவுநீர் தோட்டத்துக்குச் செல்லுமாறு பாதைகள் அமைக்கவும். முடியாவிட்டால் குறைந்தபட்சம் காய்கறி மற்றும் அரிசி கழுவும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து செடிகளுக்கு ஊற்றவும்.
உங்களது நீர் பயன்பாட்டைக் கவனிக்கவும். எங்கெல்லாம் நீரை சேமிக்கமுடியும் என்பதைக் கவனித்து அதைச் செயல்படுத்துங்கள்.
கூடியவரையில் குளிக்கும்போது ஷவர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உடல்நிலை சரியில்லாதவர்களும் முதியவர்களும் இதை செய்யத் தேவையில்லை.
நீரைப் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் போது அவற்றின் அம்சங்களைக் கவனித்து, குறைவான நீரில் இயங்கக்கூடிய சாதனங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அழகுக்காக வாங்கப்படும் செடிகளின் நீர்த்தேவையைக் கவனிக்கவும். குறைவான நீரில் நன்கு வளரும் அலங்காரச்செடிளைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களது அலுவலகத்தில் எங்கெல்லாம் நீர் வீணாகிறது என்று பார்க்கலாம். இதை சம்பந்தப்பட்டவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும்.
வீட்டு விலங்குகளைத் தோட்டத்தில் குளிக்கவைக்கவும்.
தேவைக்கு அதிகமாக ஐஸ்கட்டிகளை ஃப்ரீசரிலிருந்து வெளியில் எடுத்துவிட்டால் அதை சிங்க்கில் போடாதீர்கள். அவற்றை செடிகள் இருக்கும் தொட்டியில் போட்டுவிடலாம்.
சோப்பு போட்டு கழுவும்போது, கையில் சோப்பைக் குழைத்து நுரை வரும்வரை நீரை ஓடவிடாதீர்கள். நுரை வந்தபின்பு குழாயைத் திறந்துகொள்ளலாம்.
உங்களது குழந்தைகளிடம் நீர் மேலாண்மை பற்றிப் பேசுங்கள். வீட்டில் நீர் வீணாவதைத் தவிர்க்க வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று அவர்களிடம் கருத்து கேளுங்கள்.