பெரெரிக்கா லெ
மடகாஸ்கரின் காடுகளில் வசிக்கும் ஆய்-ஆய் எனும் விலங்கு, அதன் தனித்துவமான தோற்றத்தாலும் நடத்தைகளாலும் உலகில் உள்ள மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டுள்ளது.
இது ஒரே விலங்கினத்தை சேர்ந்தது என்பதால் இதற்கு நெருங்கிய உறவினர்கள் இல்லை.
எலியின் பற்கள், வௌவாலின் காதுகள், ஓநாயின் முகத்தைப் போன்று தோற்றமளிக்கும் இது மற்ற விலங்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இரவில் உணவு தேடி மரக்கிளைகளில் பயணிக்கும், இரவில் உணவு தேடும் விலங்கு ஆய்-ஆய் ஆகும்.
இது பகல் நேரத்தில் இலைகளையும், கிளைகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட வட்ட வடிவ கூட்டில் ஓய்வெடுக்கும்.
இதன் முக்கிய உணவு பூச்சிகளும் புழுக்களும் ஆகும். இது நட்ஸ், பழங்கள், தேன் மற்றும் காளான்கள் போன்றவற்றைக்கூட உண்ணும். புழுக்களைத் தேடி உண்பதற்கு அதன் தனித்துவமான உடலமைப்பே முக்கியக் காரணம்.
இதன் பெரிய வௌவால் போன்ற காதுகள் மிகவும் கூர்மையானவை. இது மரத்தின் உள்ளே இருக்கும் புழுக்களின் சத்தத்தை வைத்து அதை அடையாளம் கண்டு கொள்ளும்.
இதன் நடுவிரல் மிகவும் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் மூலம், மரத்தில் இருக்கும் புழுக்களைத் தட்டி, இழுத்து வெளியே எடுக்கும். புழுக்களைப் பிடிக்கவும், தேங்காயை வெட்டி எடுக்கவும் இந்த விரல் பெரிதும் உதவுகிறது.
தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் அதன் முன் பற்களைப் பார்த்து, இது ஒரு கொறிக்கும் விலங்கு என ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். இந்த பற்கள் சிமெண்ட் கற்களைக் கூட கடிக்கும் அளவுக்கு வலிமையானவை.
இரவில் பார்க்க உதவும் பெரிய, வட்டமான கண்களை இது கொண்டுள்ளது.
அதன் கால் விரல்கள் நீண்ட மற்றும் கூர்மையானவை. இதனால் மரக்கிளைகளில் எளிதாக தொங்க முடியும்.
ஆய்-ஆய் பயப்படும்போதும் அல்லது உற்சாகமடையும்போதும் அதன் உரோமங்கள் நிமிர்ந்து, அதன் உடலின் அளவை இரட்டிப்பாக்கியது போல் தோற்றமளிக்கும்.
உள்ளூர் பழமொழியின்படி, ஆய்-ஆய் விலங்கு துரதிர்ஷ்டத்தையும் மரணத்தையும் கொண்டு வரும் என மக்கள் நம்புகின்றனர்.