கலைமதி சிவகுரு
பெயரைக் கேட்டால் இது ஒரு தாவரம் என நினைக்கத்தோன்றும். ஆனால், இது ஒருவகை மீன். இதன் உடல் ஒருபூச்செடி போன்றிருக்கும்.
காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல்தாமரை என அழைக்கப்படுகிறது.
'சி அனிமோன்'(Sea animone) என ஆங்கிலத்தில் அறியப்படும் கடல் தாமரைகள், ½செ.மீ. முதல் 6 அடிவரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவில் தோற்றம் அளிக்கும்.
இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலின் அடிப்பகுதியில் மணற்பரப்பில் ஒட்டிக்கொண்டு உயிர்வாழும்.
கால்கள் இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவை போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்துக்கொள்ளும்.
இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன், உடலின் நடுவில் வயிறு வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீனினங்களை விழுங்க உதவுகிறது.
சில வகைகள் தனது இதழ்கள் மூலமாக மற்ற மீன்களைக் கவர்ந்து இழுத்து அருகில் வந்த உடன் விஷத்திரவத்தைப் பீய்ச்சிக்கொன்று, பின்னர் வாய்போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.
இவற்றின் பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது.
முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தில் ஒட்டிக்கொண்டு புழுவாகவே வாழ்ந்து, பின்னர் உருமாறி தாமரை போல் மலர்கின்றன.
வளர்ச்சி அடையும்போது நுண்ணிய பச்சைபாசிகளையும் சேர்த்துகொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும், தோற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறது.
கோமாளி மீன்கள் எனப்படும் ஒருவகை மீன் இனம்மட்டுமே கடல்தாமரைக்குள் உயிர்வாழக்கூடியது. இந்த மீன்கள் பிடித்துக்கொண்டு வரும் இரைகளை தாமரைக்குக் கொடுக்கின்றன.
கடல் தாமரையைக் கண்டாலே கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி ஓடிவிடுகின்றன. இந்தக் கோமாளி மீன்கள் மட்டும் இதைச்சுற்றி வரும். கடல் தாமரையின் ஒட்டுண்ணிகளை கோமாளி மீன்கள் சாப்பிட்டு விடுவதால் அவை நோய்களில் இருந்து காப்பாற்றப்படுகின்றன.
கோமாளி மீன்களின் வண்ணங்களால் கவரப்பட்டு அருகில் வரும் சிறுஉயிர்களைக் கடல்தாமரை உணவாக்கிக்கொள்கிறது. கடல்தாமரையில் வாழ்வதால் இந்தக் கோமாளி மீன்களை எதிரிகள் நெருங்குவதில்லை.
துறவி நண்டுகள் எனப்படும் ஒருவகை நண்டுகள் கடல்தாமரையில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்து சாப்பிடுகின்றன.
வயதாகிவிட்ட கடல்தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. கடல்தாமரையின் வாய்மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வாய்பகுதியில் இறால் மீன்கள் சுற்றிக்கொண்டே இருக்கும்.