தேனி மு.சுப்பிரமணி
மனிதர்களைத் தவிர்த்து, புத்திசாலி விலங்குகளாகக் கருதப்படும் சிம்பன்சிகள் மற்றும் டால்பின்களுடன் பறவையான காகமும் சேர்க்கப்படுகிறது.
சுய அடையாளம் காணும் ஆற்றலைக் காகங்கள் பெற்றுள்ளன. இது ஒரு வகை சிறப்பு அறிவாற்றல். இந்த ஆற்றல் மனிதர்களிடையே சிறு வயதில் இருந்தேக் காணப்படுகின்றது.
தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால், அனைத்துக் காக்கைகளும் ஒன்று கூடிக் கரையும் தன்மையைக் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாகக் கருதப்படுகிறது.
பழந்தமிழர் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு காகத்திற்கு வைக்கப்பட்டு, அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவு கிடைத்தால் கரைந்து, தன் உறவுகளையும் அழைத்துப் பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு. அதே வேளையில், திருடிச் செல்லும் உணவைத் தான் மட்டுமே உண்ணும். அதற்குப் பிற காக்கைகளை அழைப்பதில்லை.
உணவைச் சேமித்து, ஓரிடத்தில் பத்திரமாக வைக்கும் பண்பு காகங்களிடம் அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் அந்த உணவு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், மற்ற காக்கைகளும் புத்திசாலிகள் என்பதால், மறைத்து வைத்த உணவை எடுத்துவிடும்.
வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகள் நன்றாகப் பேசக் கற்றுக் கொள்ள முடியும் என்பது நமக்குத் தெரியும். சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், காகங்கள் கிளிகளை விட நன்றாகப் பேசக் கற்றுக் கொள்ள முடியும்.
காகத்திற்குத் தன் கூட்டிலிருக்கும் முட்டை தன்னுடையதில்லை என்று தெரிந்த போதும், குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும்.
திபெத்தில் இருந்து கிரீஸ் வரையிலான பண்பாடுகள் காக்கையைக் கடவுள்களுக்கான தூதராகக் கருதுகின்றன. போர்களின் போது, செல்டிக் தெய்வங்கள் பெரும்பாலும், காக்கைகளின் வடிவத்தை எடுப்பதாக நம்பினர். ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பறந்து, ஒவ்வொரு இரவும் அவர்கள் பார்த்ததைப் பற்றிக் கடவுளுக்குத் தெரிவிக்கின்றன என்ற நம்பிக்கையும் இருந்தது.
பிரான்சில், காகங்கள் பொல்லாத பாதிரியார்களின் ஆன்மா என்றும், காகங்கள் பொல்லாத கன்னியாஸ்திரிகள் என்றும் நம்பிக்கை இருந்தது. ஜெர்மனியில், காகங்கள் கெட்ட ஆன்மாக்களின் அவதாரம் அல்லது சாத்தான் என்றும் நம்பினர்.
இந்து சமயப் பண்பாட்டில் காகங்கள், இறந்தவர்களின் ஆன்மாவாகக் கருதப்படுகின்றன. முன்னோர் வழிபாட்டின் போது, காகங்களுக்கு உணவு வைக்கும் வழக்கம் இருக்கிறது.
அலாஸ்கா மற்றும் கனடாவில் காகங்கள் பனி மலைகளில் உருண்டு விளையாடி மகிழ்கின்றன. ஓநாய்கள், நீர்நாய்கள் மற்றும் நாய்கள் போன்ற பிற விலங்குகளிடமிருந்து விலகி விளையாடுகின்றன.
காகங்கள் எறும்புப் புற்றுகளில் படுத்துக் கொண்டு உருளும். இதற்கான அறிவியல் பெயர் எறும்பேற்றுதல் (Anting) என்பர். அதாவது, உயிருள்ள எறும்பைச் சிறகுகளுக்குள் செருகுவித்து, இறக்கைகையையும் தோலையும் துப்புரவாக்குகின்ற செயலாகும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, காக்கைகள் தொடர்பு கொள்ள சைகைகளைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நாம் விரல்களால் காட்டுவதைப் போலவே, மற்றொரு பறவைக்கு ஒரு பொருளைக் குறிக்க காக்கைகள் தங்கள் அலகுகளால் சுட்டிக் காட்டுகின்றன என்று தெரிய வந்திருக்கிறது.
காகங்கள் தங்கள் உணவுத் தேவையின் போது, விலங்குகளை ஏமாற்றுகின்றன. ஒரு காகம் விலங்குகளின் கவனத்தைத் திசை திருப்பும். மற்றொரு காகம், அதன் உணவைத் திருடும்.
காகங்கள் அவர்கள் விரும்பும் பறவைகளையும் நினைவில் வைத்துக் கொள்வதோடு, சில பறவைகளைப் பார்த்த பிறகு குறைந்தது மூன்று வருடங்களுக்கு அவைகளுக்கு நட்புடன் பதிலளிக்கின்றன. இதேப் போன்று சில பறவைகளிடம் வெறுப்பையும் கொள்கின்றன.
காகம் மாலை வேளையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டுத்தான் தன் கூட்டுக்குச் செல்லும்.