கலைமதி சிவகுரு
கடல் பசு என்பது கடல் விலங்குகளின் Sirenia வரிசையைச் சேர்ந்தது. இது தாவரங்களை உணவாகக் கொண்டு வாழும் ஒரே நீர்வாழ் பாலுட்டி விலங்காகும்.
மீனவர்கள் இதை ‘ஆவுளியா’ என்று அழைக்கிறார்கள். மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. இவை பெரும்பாலும் அடர்ந்த மூங்கில் புல்வெளிகளைத் தானாக தேர்வு செய்து வாழ்கின்றன.
இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் அதிகமாக இவை காணப்படுகின்றன. இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் போன்ற பகுதிகளிலும் காணக் கிடைக்கின்றன.
உடலியல் சிறப்பம்சங்கள்: நீளமான மற்றும் ஒற்றையான உடலமைப்பு. மண்ணிறம் அல்லது பழுப்பு மஞ்சள் நிற தோல். டால்பின்கள் போன்ற சமச்சீரான வால். பளபளப்பான மற்றும் வளைந்த மூக்கு, மூங்கில் புல் ஆகியவற்றைப் பிடித்து உண்ண உதவும்.
இதன் உடலின் நீளம் 2.5 முதல் 4 மீட்டர் வரை இருக்கும். இதன் எடை 250 முதல் 500 கிலோ வரை. அபூர்வமாக 800 கிலோவிலும் கிடைக்கிறது.
உணவுப் பழக்கம்: மூங்கில் புல், கடல் புல் போன்ற தாவரங்களை மட்டுமே உண்ணும் இவை நீர்நிலைகளில் உள்ள தாவங்களை மட்டுமே தின்று வாழ்பவை. நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும்.
கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம்.
இனப்பெருக்கம்: ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உள்ள காலத்தில் ஒரு முறை 1 கன்றுக்குட்டி மட்டுமே பெற்றெடுக்கும்.
புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி தாயின் பாலை உண்டு வளர்கிறது. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட்.
கடல் பசுவின் பயன்பாடுகள்: கடல் பசுவின் இறைச்சிக்கு சந்தையில் கிராக்கி அதிகம்.
இவற்றின் பற்களை வைத்து நச்சு முறிவு மருந்து தயாரிக்கின்றனர்.
தலையிலிருந்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர்.
தோலை வைத்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.
3 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் உள்ள கடற்பசு கிட்டத்தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமமானது. 70 ஆண்டுகளுக்கு மேல் இது உயிர் வாழும். கடல்சார் மண்டலத்தின் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன.
கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும்.