பாரதி
பழந்தமிழர்களால் பல நோய்களுக்கு மருந்தாக இந்த கொடுக்காய்ப்புளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் இந்த மரங்கள் காணப்படுவதில்லை. நாம் இந்த பதிவில் கொடுக்காய்ப்புளியின் பல்வேறு பயன்களை பற்றி காண்போம்.
இதன் இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
கொடுக்காய்ப்புளியில் வைட்டமின் B1 (தயாமின்) இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுத்தத்தினால் உண்டாகும் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த வைட்டமின் B1 மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் B2 சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. இதனால் 30 வயதை கடந்தவர்களுக்கு முகத்தில் ஏற்படும் மங்கு பிரச்சனையை குறைப்பதிலும், சருமத்தில் ஏற்படும் பலவகையான பாதிப்புகளுக்கும் கொடுக்காப்புளி சிறந்த தீர்வாக உள்ளது.
மேலும் கொடுக்காப்புளியில் உள்ள வைட்டமின் C முகத்தில் ஏற்படும் முதுமை தோற்றத்தை குறைக்கிறது. கொடுக்காப்புளியை உணவில் சேர்ப்பதன் மூலம் முகப்பொலிவு கிடைக்கும்.
ஆப்பிளுக்கு இணையான பழமாக பார்க்கப்படும் கொடுக்காப்புளியில் வைட்டமின் C அதிகமாக உள்ளதால், ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்படுவதுடன் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதனால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட இந்த கொடுக்காய்ப்புளி உதவுகிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவை சேர்க்கிறது. பற்களில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இதனால் பல்வலி, ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது போன்றவை தடுக்கப்படும்.
வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சர், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், மலச்சிக்கல், செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த காய் சிறந்த தீர்வாக இருக்கிறது. இதில் உள்ள நீர்ச்சத்து இவ்வகையான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும், நீண்ட நேரம் பசி ஏற்படாத உணர்வைக் கொடுத்து, உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் எடையை சம நிலையில் பராமரிக்க உதவுகிறது.
இரத்த ஓட்டம் சீராகவும், இரத்தக் குழாய்களில் உண்டாகும் இரத்த உறைவைத் தடுக்கவும் உதவி புரிகிறது. அல்சர் உண்டாகும் ஆபத்தையும் தடுக்கிறது.
கொடுக்காப்புளியை தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் வாத நோய் ஏற்படாது.
கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான நோய்கள், குடல் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி நல்ல மருந்து.
கொடுக்காய் புளி கல்லீரலில் உள்ள அனைத்து நச்சு இரசாயனங்களையும் வளர்சிதை மாற்றம் செய்து, அவை நமது உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.
கொடுக்காய் புளி மற்றும் இலைகள் முக்கியமாக காசநோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
இதன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.