கே.எஸ்.கிருஷ்ணவேனி
அக்கி ஆப்பிள் பழம்:- இது கரிபியன் உணவு வகைகளில் பிரபலமான ஒன்று. ஜமைக்காவின் தேசிய பழம் இது. இதில் அதிக அளவு விட்டமின் ஏ, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது.
கிவானோ:- கிவானோ என்று அழைக்கப்படும் கொம்பு முலாம்பழம். இது ஸ்பைக்கி ஆரஞ்சு வெளிப்புறத்தையும் ஜெல்லி போன்ற பச்சை உட்புறத்தையும் கொண்டது. வெள்ளரிக்காய் போன்ற சுவை கொண்டிருப்பதால் இதனை ஆப்பிரிக்க கொம்பு வெள்ளரிக்காய் என்றும் அழைக்கிறார்கள்.
புத்தரின் கை சிட்ரான்:- தென்கிழக்கு ஆசியாவின் பிரபலமான பழம் இது. இது பழமையான சிட்ரஸ் வகைகளில் ஒன்றாகும். வித்தியாசமான வடிவம் மற்றும் எலுமிச்சையின் வாசனை கொண்டது. விட்டமின் சி நிறைந்தது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. நார்ச்சத்து மிகுந்தது. கால்சியம், விட்டமின் ஈ போன்ற சத்துக்களும் உள்ளன.
ரம்புட்டான்:- இது கூந்தல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் வளர்கின்றன. விட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. உடல் எடையை குறைக்க உதவும். அனிமியாவை தடுக்கும். எலும்புகளை பலப்படுத்தும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
தாமரில்லோ:- சிவப்பு பழங்கள் அதிக புளிப்புடனும், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த பழங்களில் விட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன.
பெர்ரி ஹாஸ்காப்:- ஹனி பெர்ரி என அழைக்கப்படும் இது சைபீரியாவை சேர்ந்தது. கடுமையான தட்பவெப்ப நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் சுவை ப்ளூபெர்ரி அல்லது ராஸ்பெரியை ஒத்திருக்கும்.
பாம்பு பழம்:- இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது. பாம்பு பழம் சிவப்பு, பழுப்பு பாம்பு செதில்களை ஒத்த செதில் தோல் கொண்டது. உள்ளே இருக்கும் சதை இனிப்பாகவும், கசப்பாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
பிதாயா/டிராகன் பழம்:- வெள்ளை பிதாயா, சிவப்பு பிதாயா, மஞ்சள் பிதாயா என பல வகை உண்டு. இது தென் அமெரிக்க வகையாகும். இதன் சுவை கிட்டத்தட்ட தேன் போல் இனிக்கும்.
லோகுவாட்:- ஜப்பானிய ப்ளம் என்று அழைக்கப்படும் இது ஒரு சிறிய இனிப்பு சுவை நிறைந்த பழமாகும். வழவழப்பான ஆரஞ்சு நிறத்தோல் கொண்டது. இது ஜாம் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
மலாய் ரோஜா ஆப்பிள்:- இதன் சதை இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும். ரோஸ் வாட்டரின் வாசனை மற்றும் சுவையுடன் உள்ள இந்த பழங்கள் சந்தைகளில் மிகவும் அரிதாகவே கிடைக்கும் காரணம் இவை விரைவில் கெட்டு விடும் என்பதே. இளம் சிவப்பு தோல் கொண்ட மணி வடிவ பழமாகும்.
துரியன்:- பழங்களின் ராஜா என அழைக்கப்படும் இது ஒரு விசித்திரமான பழம். அதன் கடுமையான வாசனைக்கு பெயர் பெற்றது. விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் பல்வேறு தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது.
லோங்கன்:- இதன் தோற்றத்தின் காரணமாக இது "டிராகனின் கண்" என்று அழைக்கப்படுகிறது. தெற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. லிச்சி மற்றும் ரம்புட்டான் பழங்களின் குடும்பத்தை சேர்ந்தது என்றாலும் இது தனித்துவமான சுவையைக் கொண்டது. இதில் உள்ள கருப்பு விதை அமைப்பின் காரணமாக டிராகனின் கண் என்று அழைக்கப்படுகிறது.
பாசிப்பழம்:- இப்போது உலகம் எங்கும் எல்லா பகுதிகளிலும் வளர்க்கப்படும் பாசிப்பழம் ஜெல்லி போன்ற கூழால் சூழப்பட்ட நறுமண விதைகளை கொண்டது. இதில் விட்டமின் சி மற்றும் நார்சத்து அதிகம் உள்ளது. இதனை இனிப்புகள், சாலட்கள், பானங்கள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.