இரவிசிவன்
நமது அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளைவிட முளைகட்டிய பயறுகளும், நன்கு வளர்ந்த கீரைகளும் அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே!
ஆனால், முளைவிடும் பயிர்களுக்கும் வளர்ந்த கீரைகளுக்கும் இடைப்பட்டப் பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய நுண் கீரைகள் என்றழைக்கப்படும் MICRO GREENS குறித்து இன்னும் நம்மில் பலர் அறியாதிருக்கிறோம்.
நுண் கீரைகளை Super food என்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களின் Power house என்றும் உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது.
முளைக்கட்டிய தானியங்களைவிட - வளர்ந்த கீரைகளைவிட 4லிருந்து 40 மடங்கு வரை கூடுதல் ஊட்டச்சத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நுண் கீரையில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அபரிமிதமாக உள்ளன. இதில் நிறைந்துள்ள பாலிஃபினால் இதய நோய்க் காரணியான கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.
நகர்ப்புறங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக காய்கறித் தோட்டமோ, மாடித் தோட்டமோ அமைக்க இயலாதவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு நுண்கீரை வளர்ப்பது ஆகும்.
தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பால்கனி, அடுப்பங்கரை போன்ற மிகச்சிறிய இடத்தில்கூட மிகக் குறைந்த நாட்களில் சாகுபடி செய்துகொள்ள முடியும்.
உங்கள் வீட்டில் சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட ஜன்னல் ஓரங்களில் சிறிய அட்டைப்பெட்டிகளில் மண் அல்லது நர்சரிகளில் கிடைக்கும் கோகோபீட் எனப்படும் தேங்காய் நார் போன்றவற்றை நிரப்பி மிக எளிதாக இவற்றை வளர்க்கலாம்.
கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், சூரியகாந்தி, பீட்ரூட், கேரட், பயறு வகைகள், பிரக்கோலி, முட்டைக்கோஸ், முள்ளங்கி, ஆளி விதை, துளசி விதை, கோதுமை, பட்டாணி போன்ற பல வகையான விதைகள் நுண் கீரைகளாக வளர்க்க உகந்தவை .
இன்றைக்கு வழக்கத்தில் உள்ள பெரும்பாலான கீரைகளை அறுவடை செய்ய 3 முதல் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், நுண்கீரைகளின் அறுவடைக்காலம் 8 முதல் 12 நாட்கள் மட்டுமே.
விதையிலிருந்து நாற்றுகள் 3 முதல் 4 அங்குல உயரம் அடைந்து நான்கைந்து தளிர் இலைகள் துளிர்விட்டவுடன் அறுவடை செய்துவிடலாம்.
நுண் கீரைகளின் முழுமையான பலன்களைப் பெற சாகுபடி செய்தவுடன் வேர், தண்டு, தளிர்கள் அனைத்தையும் உங்களுக்கு விருப்பமான உணவுகளின் மீது (கொத்தமல்லி தழைகளைத் தூவி உண்பது போலவே) தூவி உண்ணலாம்.
நமக்குத் தேவையான நுண்கீரைகளை நாமே விளைவித்துக் கொள்வது நமது ஆரோக்கிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஆர்வமிருந்தால் விற்பனையில் ஈடுபட்டு வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும் சாத்தியங்களைக் கொண்டதாகும்.
மேற்கத்திய நாடுகள் இந்த நுண்கீரைகளின் அருமை பெருமைகளை உணர்ந்து அவற்றை ஸ்மூத்திஸ், சூப், சாண்ட்விட்ச், பாஸ்தா போன்ற உணவுகளில் கலந்து உண்ணுவதைப்போல நாமும் அனைத்து விதமான பொரியல், வறுவல், கூட்டு போன்ற எந்தவித உணவுகளுடன் கலந்து நமது விருப்பம் போல உண்ணலாம்.
சுருங்கச் சொன்னால்.... நுண்கீரைகள்
பயிரிட்டு வளர்க்க மிகவும் எளிதானவை.
மிகக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய முடியும்.
எல்லா காலநிலைகளுக்கும் ஏற்றது.
ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்றது.
நகர்ப்புறச் சூழலிலும் வளரக் கூடியது.
நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
தனித்துவமான சுவையும் மணமும் கொண்டது.