கல்கி டெஸ்க்
"காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடா விட்டால் மூளை சுறுசுறுப்பை இழக்கிறது. இதனால் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்.
மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியச் சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும்.
சிலர் காலை சாப்பாட்டைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவைச் சாப்பிட்டாலே உடல் எடை சீராக இருக்கும் என்பது தான் உண்மை.
காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்குப் புரதமும் நார்ச்சத்தும் அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவை உண்ணலாம்.
முட்டை, பீன்ஸ், பால், முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது. அந்த வகையில் காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது.
உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிக அவசியம். எனவே காலை உணவில் புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப்பட வேண்டும், ஏதாவது ஒன்று மட்டும் போதாது. சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும்.
சட்னியைப் பொருத்தவரை புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தக்காளிச் சட்னிகளில் வைட்டமின் சத்து உள்ளது.
சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்லது.
சப்பாத்திக்கு 'தால்' சேர்ந்துக் கொள்ளலாம். வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் வெஜ் சான்ட்விச்சாகச் சாப்பிடலாம்.
காலை 11 மணிக்கு மோர், இளநீர், சூப் அல்லது பழச்சாறு என ஏதாவது ஒன்றை அருந்தலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ சாப்பிடக் கூடாது.
தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழங்களைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
கேழ்வரகுக் கூழ். கோதுமைக் கஞ்சி, அரிசிக் சுஞ்சி, மற்றும் இட்லி ஆகியவற்றை காலை உணவாகச் சாப்பிடுவதுச் சிறந்தது.
காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு தொப்பை, காலை உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும்.
காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தி தேவை. எனவே ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உண்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் கூடாது.