கே.எஸ்.கிருஷ்ணவேனி
மரங்கள் என்றால் நிழல் தரும். பூக்கள் பூக்கும். காய் காய்க்கும் என்பதைத் தாண்டி சில மரங்கள் தோற்றத்திலோ நிறத்திலோ மற்ற மரங்களை விட தனித்துவமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட விசித்திரமான மரங்களைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
நகரும் மரம்: காஸ்போனேர் என்ற மரம் 'வாக்கிங் பாம் ட்ரீீ' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறு மரம் இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒரு ஆண்டில் 20 மீட்டர் தூரம் வரை நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பாபாப் மரங்கள்: அறிவியல் ரீதியாக அடான்சோனியா என்று அழைக்கப்படும் பாபாப் மரங்கள் தலைகீழான மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மரத்தின் கிளைகள் வேர்களைப் போல் தோற்றமளிக்கும். ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
டிராகனின் இரத்த மரம்: ஏமனில் உள்ள சோகோத்ரா என்ற தீவில் உள்ள மரம் குடை போன்ற விதானம் மற்றும் இதன் ரத்த சிவப்பு சாறுக்காக அறியப்படுகிறது. இந்த மரங்கள் பொதுவாக ஒரு தடிமனான தண்டுகளைக் கொண்டு குடையைப் போல் மேல் நோக்கி இருக்கும்.
பட்டு பருத்தி மரங்கள்: கபோக் மரங்கள் அல்லது சீபா மரங்கள் என அழைக்கப்படும் பட்டு பருத்தி மரங்கள் வெப்ப மண்டல பகுதிகளுக்கு சொந்தமான பெரிய இலையுதிர் மரங்களாகும். இவை 164 முதல் 230 அடி உயரத்தை எட்டும்.
ஜபோடிகபா/ஜபுதிகாபா (Jaboticaba): பிரேசிலிய திராட்சை மரம். மிகவும் மெதுவாக வளரும். இதன் தண்டுகளில் ஊதா கருப்பு வெள்ளை போன்ற வண்ணங்களில் பழங்கள் காணப்படும்.
ஹைபரியன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள ஒரு கடலோர ரெட்வுட் மரம். இது 380.3 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மரமாகும்.
பீரங்கி முந்திரி மரம்: பிரேசிலில் அமைந்துள்ள இந்த மரம் 8,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய முந்திரி மரங்களில் ஒன்றாகும். அளவில் பெரியதாக இருந்தாலும் சிறிய வகை மரங்களை விட குறைவான முந்திரிக் கொட்டைகளை உற்பத்தி செய்கிறது.
ஹாஃப்மென்ஸ்: கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1000 மீட்டர் உயரத்தில் காணப்படும் ஒரு ஸ்பைனி கற்றாழை போன்ற மரமாகும். இது உயரமான உடற்பகுதியின் உச்சியில் பெரிய இலைகளைக் கொண்டது. இவை தெற்கு நமீப் பாலைவனத்திலும், வடமேற்கு தென்னாப்பிரிக்காவிலும் உள்ள வறண்ட நிலங்களில் காணப்படுகின்றன.
குயிவர் மரம்: கோக்கர் பூம் என்று அழைக்கப்படும் இந்த மரங்கள் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றை நடுங்கும் மரங்கள் என்றும் அழைக்கின்றனர்.
ரெயின்போ யூகலிப்டஸ்: இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் காணப்படும் இந்த மரங்களின் பட்டைகள் பச்சை, நீலம், ஊதா, ஆரஞ்சு, பழுப்பு போன்ற பல வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த மரங்கள் காகித உற்பத்திக்காக பயிரிடப்படுகிறது.
பாட்டில் மரங்கள்: நமீபியாவில் காணப்படும் இந்த மரம் மிகவும் கொடிய மரமாக சித்தரிக்கப்படுகிறது. இம்மரத்திலிருந்து கிடைக்கும் பால் மிகவும் நச்சுத்தன்மை உடையது. இதை ஒரு காலத்தில் வேட்டையின்போது அம்பில் தடவும் விஷமாக பயன்படுத்தியுள்ளனர்.
ஓயமல் ஃபர்(Oyamel fir): டிரான்ஸ் மெக்சிகன் எரிமலை பெல்ட்டின் காடுகளில் வளரும் ஓயமெல் ஃபர் 8000 முதல் 11 ஆயிரம் அடி உயரம் வளரும். புனித ஃபர்ஸ் என்று பொதுவாக அறியப்படும் இந்த மரங்கள் மோனார்க் பட்டாம்பூச்சிகளின் இருப்பிடமாக அமைகின்றன.