எஸ்.மாரிமுத்து
குழந்தைகளை விரும்பி கீரை சாப்பிட வைக்க, ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து மசித்தும் சப்பாத்தியுடன் பிசைந்து போட்டு கொடுக்கலாம். எண்ணெய் கேரட், பீட்ரூட், பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவைத்து, தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட வைக்கலாம்.
முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுத்து துவையல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
எந்த குருமாவும் நீர்த்து விட்டால் ஒரு கைப்பிடி ஓட்ஸை பொடித்துப் போட்டால் குருமா நன்றாக கெட்டியாகவும், ருசி வித்தியாசமாகவும் இருக்கும்.
சாம்பார் , கூட்டு முதலியவற்றிற்கு தேங்காய் இல்லையெனில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை அரைத்துச் சேர்த்தால் ருசியாகவும் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும்.
புளிக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார் வைக்கும் போது தக்காளியை நறுக்கிப் போடாமல் மிக்ஸியில் அரைத்து சேர்த்தால் தக்காளி வீணாகாமல், குழம்பு ருசியாக இருக்கும்.
அப்பளத்தை சுட்டு அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து சாதத்தில் நெய், அப்பளப்பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட ருசி அள்ளும்.
தோசை மாவில் நான்கு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தோசை ஊற்றினால் தோசை மிருதுவாகவும், ஆறியபின்கூட நன்றாகவும் இருக்கும்.
பிரெட் துண்டுகளில் வெண்ணெயை சீராக தடவ, வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாக குழைத்து தடவினால் சரியாக தடவ முடியும்.
மெதுவடை மாவு நீர்த்து விட்டால் ரஸ்க்கை பொடி செய்து மாவில் சேர்த்துப் பிசைந்து சுடும் போது வடை மொறு மொறுவென ருசியாக இருக்கும்.
அரிசி ரவை, ரவா உப்புமா செய்யும் முன்பு ரவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசிறி வைத்து பின் உப்புமா செய்தால் கட்டி இல்லாமல் நன்றாக உதிரியாக ருசியாக இருக்கும்.
கட்லெட் செய்யும் போது பிரட் தூள் இல்லையெனில் ரவையை மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம்.
சப்பாத்தி மாவுடன் , கால் பங்கு சோயாமாவைச் சேர்த்து பிசைந்து செய்தால் புரதச் சத்து கிடைக்கும். சப்பாத்திமாவுடன், தயிர், வாழைப் பழத்தை மசித்து நீர் சேர்த்து பிசைந்து செய்தால் சாஃப்ட்டாக ருசியாக இருக்கும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் அவல், தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்து உப்பு, சிறிது சமையல் சோடா கலந்து 3 மணி நேரம் கழித்து ஆப்பம் செய்தால் ருசியாக இருக்கும்.