எஸ்.ராஜம்
சாம்பார் பொடி அரைக்கும் போது சுக்கு சேர்த்து அரைத்தால் மணம் கூடும். பருப்பினால் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளும் குறையும்.
குளோரின் கலந்த நீரில் காபி, டீ தயாரித்தால் குளோரின் சுவை தெரியும். முதலில் நீரில் சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு காபி, டீ போட்டால் குளோரின் சுவை தெரியாது.
சௌசௌ உள்ளே இருக்கும் பருப்பை சாம்பார், குழம்பு போன்றவற்றிற்கு அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
கட்லெட் செய்யும்போது காய்கறி கலவையை உருட்டி, நீரில் கரைத்த மைதா மாவில் தோய்த்து, ரஸ்க் அல்லது பிரட் தூளில் புரட்டி விட்டு பொறித்தால், கட்லெட் உடையாமலும், உதிராமலும், மொறு மொறு என்றும் வரும்.
தோசை மாவில் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வதக்கி கலந்து விட்டால், தோசைக்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவைப்படாது .
முட்டைகோஸ், பட்டாணி, கீரைகள் போன்றவை வேகும்போது சிறிது சர்க்கரை, வெந்த பிறகு உப்பு சேர்த்தால் சுவை கூடும்.
உருளைக்கிழங்கை வறுவலாக சீவி வெந்நீரில் ஐந்தாறு நிமிடங்கள் போட்டு எடுத்து, பிறகு உப்பு கரைத்த நீரில் போட்டு எடுத்து, பிறகு பொறித்தால், வறுவல், மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும் .
பாப்கார்ன் நமத்துப் போய்விட்டால் சட்னி அரைக்கும் போது பொட்டுக்கடலைக்கு பதிலாக அதை பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி விட்டு இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டால் குழையாமல் பதமாக வேகும்.
எள்ளை பொடி செய்யும் போது சிறிது உப்பு சேர்த்தால் கசக்காமல் இருக்கும்.
அப்பளத்தின் இரு புறங்களிலும் நன்கு துடைத்து விட்டு பொரித்தால் எண்ணெய் கறுக்காது. அப்பளமும் நன்கு பொரியும்.
குருமா, கிரேவி போன்றவற்றில் நீர் கூடி விட்டால், பொட்டுக்கடலை மாவு கலந்தால் பதமாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.
வடை செய்ய மாவை அரைத்து, ஃபிரிட்ஜில் வைத்து செய்தால் எண்ணெய் குடிக்காது. தண்ணீர் அதிகமாகி எண்ணெய் குடித்தால் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து தட்டவும்.