எஸ்.ராஜம்
சமையல்ல சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சாலே பெரிய சுவையை கொண்டு வர முடியும். அப்படி உங்க சமையலை அடுத்த லெவலுக்கு கொண்டு போகப்போற சில 'சீக்ரெட்' டிப்ஸ் தான் இன்னைக்கு நாம பார்க்கப்போறோம்.
தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபுந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான பச்சடி தயார்.
கேரட்டை தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் போட்டு வைக்கவும். இரவு நேரத்தில் தண்ணீரிலிருந்து எடுத்து விடவும். பிறகு மறுநாள் காலை தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படி செய்து வந்தால், கேரட்டைப் பத்து நாட்கள் வரை வாடாமல் அழுகாமல் பாதுகாக்கலாம்.
குருமா நீர்த்து விட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸைப் போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கெட்டிப்பட்டு விடும் ருசியும் அதிகமாகும்.
சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றி கொதிக்க வைத்து சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு அதன்பின் சேமியாவுடன் நெய், சர்க்கரை, முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறினால் கேசரி ஆறிய பின்னும் உதிர் உதிராக இருக்கும்.
பட்சணங்கள் நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்க பிரண்டையை அம்மியில் நீர்விட்டு அரைத்து உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதை ஆறவிட்டு வடிகட்டி அந்த நீரில் பட்சணங்கள் செய்யும் மாவினைப் பிசைந்து சுட்டால் மொறுமொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.
துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிய தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் பருப்பு விரைவில் வெந்து, பக்குவமாக இருக்கும்.
சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
குக்கரில் பொருட்களை வேக வைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் குக்கரை வழக்கத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.
பொறியல்களுக்கு தேங்காய் போடும்போது, தேங்காயை வேக விடாமல், காய்கறிகள் வெந்ததும் இறக்கி, தேங்காய்த் துருவலை மேலே தூவினால் கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.