கிரி கணபதி
வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தோலை அப்படியே 'டஸ்ட் பின்ல' போடுவது தான் நம்ம ஊர் வழக்கம். ஆனால், அந்தத் தோலிலும் பழத்துக்கு நிகரான சத்துகள் இருக்கு, அதையும் சூப்பராக சமைச்சு சாப்பிடலாம்.
1. தோலில் பூச்சிக்கொல்லி அல்லது அழுக்கு இருக்கலாம். அதனால், சமைக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து தோலை நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.
2. பழத்தின் காம்பு பகுதியையும், கீழிருக்கும் கருப்பான முனையையும் வெட்டி தூக்கி எறிந்துவிட்டு, நடுப்பகுதியை மட்டும் சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
3. தோலில் லேசான துவர்ப்பு இருக்கும். அதைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, 10 நிமிடம் சுடுதண்ணீரில் கொதிக்க வைத்தால் அந்தப் பிரச்சனை போய்விடும், தோலும் மென்மையாகிவிடும்.
4. நன்கு பழுத்த, கறுப்புப் புள்ளிகள் விழுந்த மஞ்சள் நிறத் தோல்கள் இனிப்பாக இருக்கும். காயாக இருக்கும் பச்சைப் பழத்தின் தோல் காரமான உணவுகள் செய்ய ஏற்றது.
5. சுத்தம் செய்த தோலை வதக்கி, அதோடு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்தால். சுடச்சுட சாதத்துக்கு அட்டகாசமான துவையல் ரெடி.
6. பொடிப் பொடியாக நறுக்கிய தோலை, வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து போட்டு தாளித்து, கொஞ்சம் தேங்காய் துருவல் தூவினால், சூப்பர் பொரியல் தயார்.
7. வேகவைத்த தோலை ஒரு Fork ஸ்பூனால் கீறினால், பாக்க அப்படியே கறித்துண்டு மாதிரி ஆகிவிடும். இதை சிக்கன் மசாலா போட்டு வறுத்தால் 'வெஜ் சிக்கன்' ரெடி.
8. நன்கு பழுத்த பழத்தின் தோலை, பழத்தோடு சேர்த்தே மிக்ஸியில் போட்டு பாலும் தேனும் கலந்து 'ஸ்மூத்தி'யாகக் குடிக்கலாம். இது எக்ஸ்ட்ரா ஃபைபர் தரும்.
9. தோலை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள் தடவி எண்ணெயில் பொரித்தோ அல்லது 'ஏர் ஃப்ரையரில்' வறுத்தோ எடுத்தால், மொறுமொறு சிப்ஸ் தயார்.
10. இதை ஏதோ கஞ்சத்தனத்துக்காகச் செய்யவில்லை. இதில் பொட்டாசியம், விட்டமின் B6, மற்றும் செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்து ஏகப்பட்டது இருக்கு.
அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது கண்டிப்பா தோலை தூக்கிப் போட உங்களுக்கே மனசு வராது. இதுல ஏதாவது ஒரு டிஷ்ஷை ட்ரை பண்ணிப் பாருங்க.