இந்திராணி தங்கவேல்
சமோசா ஓரங்களை மடிப்பதற்கு மைதாவை நன்றாக பேஸ்ட் போலாக்கி, அதனால் ஓரங்களை ஒட்டி எண்ணெயில் பொரிக்கும் பொழுது லேசாக கூட விரிசல், பிரிந்து வருவது இல்லாமல் இருக்கும்.
கோதுமை மாவுடன் உளுந்து மாவு மற்றும் இதர சாமான்கள் கலந்து போண்டா செய்தால் சுவையாக இருக்கும்.
மைதாவை நன்றாக அவித்துவிட்டு அதில் மணிகாரா பூந்தி செய்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கை தோல்சீவி குச்சி குச்சியாக சீவி எண்ணெயில் பொரித்தடுத்து, சர்க்கரை பாகில் போட்டெடுத்தால் இனிப்பு சேவ் சுவையாக இருக்கும்.
பீட்ரூட் துருவலுடன், அரிசி, கடலைமாவு கலந்து, தனியா, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிசறி பக்கோடா செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுண்டல், வெள்ளை சுண்டல், வெள்ளை பட்டாணி போன்றவைகளில் வடை செய்யும்பொழுது எள்ளில் புரட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
முறுக்கு மாவில் தேங்காய் பால் கலந்து உப்பு போட்டு பிசைந்து சீப்புச்சீடை கட்டையில் தேய்த்து சிப்பிபோல் மடித்து பொரித்தெடுத்தால் அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.
பன்னீர் புர்ஜியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து பூரணமாக்கி சமோசா செய்து அசத்தலாம்.
கட்லெட் செய்யும்பொழுது பிரட் தூள் கிடைக்கவில்லை என்றால் ரவையில் புரட்டி கட்லெட்டை எண்ணெய் கடாயில் வேக வைக்கலாம்.
நூடுல்ஸ், சேமியா இவைகளில் கொதிக்கும் நீரை ஊற்றி நன்றாக வெந்தவுடன் வடித்துவிட்டு தாளிக்கலாம். சட்டென்று வேலை முடியும். பதார்த்தங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும். இதனால் சாப்பிடவும் ருசியாக இருக்கும்.