மகாலெட்சுமி சுப்ரமணியன்
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட அதை சமைக்கும் முறையில் (Healthy cooking) தான் சத்துக்கள் கிடைப்பது அடங்கியிருக்கிறது.
எப்பொழுதும் இளம் சூடான உணவுகளையே உண்ண வேண்டும். பழைய உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து பின் சாப்பிட நாளடைவில் குடல் இயக்கம் மாறுபட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
காய்கறி, பழங்களை கழுவிய பின்னரே நறுக்க வேண்டும். நறுக்கி விட்டு கழுவ அதிலுள்ள வைட்டமின் சத்துக்கள் கரைய வாய்ப்பு உள்ளது. தோலை ஒட்டியே பெருமளவில் வைட்டமின்கள் , தாதுக்கள் இருப்பதால் காய்களை தோலுடன் சமைப்பது நல்லது.
காய்களை மிகவும் பொடியாக அரியக்கூடாது. இதனால் அதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் அழியக் கூடும். காய்களை ரொம்பவும் குழைவாக வேக விடாமல் சற்று நறுக்கு மாதத்திலேயே வேக விட்டு சமைக்க சுவையோடு, சத்துக்களும் கிடைக்கும்.
வெங்காயம், பூண்டு, காய்கறிகளை முதல் நாளோ, சமைப்பதற்கு ரொம்ப நேரம் முன்போ வெட்டி வைக்க அதன் நிறம் கறுத்து போவதோடு சத்துக்களும் அழியக் கூடும். கிருமிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சமையலில் சோடா உப்பு, வினிகர், அஜினமேட்டோ போன்றவற்றை போட்டு சமைக்கக் கூடாது. இது அஜீரணத்தை உண்டு பண்ணுவதோடு நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை ஏற்பட காரணமாகிவிடும்.
கீரைகள், காய்கறிகளை குறைந்த நேரம் சிமில் வைத்து சமைக்க அதன் ருசி, சத்துக்கள் மாறாமல் இருக்கும்.
ப்ரெட், கேக் போன்றவற்றை அதிக நாள் வைத்திருந்து உபயோகிக்கக் கூடாது. அவற்றின் மேல் படிந்திருக்கும் கிருமிகள் அஜீரணப் பிரச்னைகளை உண்டாக்கி விடும்.
உப்பு, சர்க்கரை, எண்ணெய் இவற்றை குறைவாக உபயோகிக்க வாய்க்கு ருசியாக இல்லாவிடினும்,வயிற்றுக்கு இதமளிக்கும்.
சிறுதானியங்களை தனித்தனியே சமைக்க அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஒன்றோடு ஒன்று சேர்த்து செய்ய வேகும் நேரம் மாறுபடுவதோடு சுவையும் வேறுபடும்.
முளைக்கட்டிய பயறு வகைகளை அன்றன்றே சமைத்து உண்டு வந்தால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். வைத்திருந்து மறுநாள் சாப்பிட வயிறு கோளாறை ஏற்படுத்தும்.
மைதா, சர்க்கரை, ஆயில் பொருட்களை குறைத்து சாப்பிட்டாலே ஆரோக்கியம் மேம்படும்.