கே.எஸ்.கிருஷ்ணவேனி
மக்காச்சோள அடை:
காய்ந்த மக்காச்சோளம் 2 கப், பச்சரிசி 1 கப், இட்லி அரிசி 1 கப், உளுந்து 1 கப், கடலைப்பருப்பு 4 ஸ்பூன், துவரம் பருப்பு 4 ஸ்பூன், உப்பு தேவையானது, மிளகாய் வற்றல் 6, கறிவேப்பிலை சிறிது.
மக்காச்சோளத்தை இரண்டு முறை தண்ணீரில் கழுவி தேவையான அளவு நீர் விட்டு 6 மணி நேரம் ஊற விடவும். பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கழுவி தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற விடவும்.
கிரைண்டரில் சோளத்தையும், அரிசி, மிளகாய் வற்றலையும் தனித்தனியாக அரைத்தெடுக்கவும். பிறகு தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஆறு மணி நேரம் வைக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு சூடானதும் இரண்டு கரண்டி மாவை எடுத்துவிட்டு தடிமனான அடையாக ஊற்றவும். ஐந்தாறு இடங்களில் கரண்டியால் துளையிட்டு எல்லா இடங்களிலும் எண்ணையை விட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் மொறுமொறுவென சுவையான மக்காச்சோள அடை தயார்.
இதனை புளிக்க வைக்காமல் அரைத்தவுடனும் வார்க்கலாம். அப்போது ஊற்றிய அடையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி வேகவிட்டு எடுக்க மிகவும் ருசியாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!
காரப்பூண்டு சட்னி:
மிளகாய் வற்றல் 15, பூண்டு 2 பல்புகள், உப்பு தேவையானது, புளி சிறிய நெல்லிக்காயளவு, கடுகு 1 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
சூடான நீரில் மிளகாய் வற்றலையும் கடுகையும் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பூண்டை தனியாக தண்ணீரில் போட்டு ஊற விடவும். மிக்ஸியில் உப்பு, புளி, மிளகாய், கடுகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்தெடுக்கவும். பூண்டின் தோலை உரிக்கத் தேவையில்லை.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்ததைப் போட்டு இரண்டு கிளறு கிளறி இறக்க மிகவும் ருசியான காரப்பூண்டு சட்னி தயார்.