வாசுதேவன்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் சமீபத்தில் மறைந்தார்.
அக்டோபர் 1, 1924 ல் அமெரிக்காவின் ப்ளேயின்ஸ் பகுதியில் பிறந்தார் ஜிம்மி கார்ட்டர். டிசம்பர் 29, 2024 ல் அதே பகுதியில் மறைந்தார். 100 வயது வாழ்ந்த முதல் முன்னாள் ஜனாதிபதி ஆவார்.
இவர் எப்பொழுதும் சமாதானத்துக்காக பாடுபட்டார்.1978 ல் இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் 2002ல் தான் இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலக போர் நேரத்தில் கப்பல் படையில் இருந்தவர் பிறகு விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு ஜனநாயகவாதி கட்சியில் சேர்ந்து உழைத்து, அந்த துறையில் முன்னுக்கு வந்தார். ஜார்ஜியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.
இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த கால கட்டத்தில் எகிப்த், இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் இடையே நடைப்பெற்ற சமாதான உடன்படிக்கையானது இவரது சாதனையாகக் கருதப்படுகின்றது.
அதற்கு பிறகு இவர் பல பிரச்சனைகளையும், பின்னடைவுகளையும் எதிர் கொள்ளவும், சந்திக்கவும் நேர்ந்தது.
குறிப்பாக இரான் பிரச்சனை, உள்நாட்டு போர், 1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானின் ஊடுருவல் போன்றவை.
ஜிம்மி கார்ட்டர் தோல்வி தழுவியதும் ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.
ஜிம்மி கார்ட்டர் பல கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளார். ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் குடியிருக்கும் பொழுது, பல நல்ல திட்டங்களுக்கு வழி வகுத்தார்.
இவர் மேற்கொண்ட வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
1978 ல் ஜிம்மி கார்டர் ரெவின்யு சட்டத்திற்கு கையொப்பம் இட்டார். அதன் மூலம் 19 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வரி குறைப்பிற்கு வழி வகுத்தார்.
இவர் வெள்ளை மாளிகையை விட்டு ஜனவரி 20, 1981 ல் வெளியேறும் பொழுது இவரது வயது 56.
1961 முதல் அவருக்கு இருக்கும் ஒரே வீடு ஜார்ஜியாவில் உள்ள வீடுதான். இவரது மனைவியின் பெயர் ரோசாலைன் கார்ட்டர். இவர் 2023 ல் மறைந்து விட்டார்.
அமெரிக்க கப்பல் படையில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்.