சி.ஆர்.ஹரிஹரன்
மைசூர்பாகு செய்யும்போது கடலைமாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் மைசூர்பாகு புதிய சுவையுடன் இருக்கும்.
பஜ்ஜி செய்யும் போது ஒரு கரண்டி இட்லி மாவை, அதில் கலந்து செய்தால், பஜ்ஜி உப்பி சுவையாக இருக்கும்.
ரவா லட்டு செய்யும் போது கொஞ்சம் அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்துச் சேர்த்து, நெய்யில் வறுத்து பால் பவுடர் சேர்த்து லட்டு பிடித்தால் சுவையாக இருக்கும்.
ரசகுல்லா செய்யும் போது முதலில் பாலைத் திரித்து பனீர் எடுப்போம். அந்தப் பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில் ரசகுல்லாவின் சுவை ஒரே நாளில் மாறிவிடும் .
குலோப் ஜாமூனுக்கு மாவு கலக்கும் போது, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை கரகரவென்று பொடித்துச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
அல்வா செய்யும் போது, அல்வா தண்ணீராக இருப்பது போல் இருந்தால் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.
ரவா கேசரி செய்யும் போது முதலில் ரவையைச் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அதை பயன்படுத்தி கேசரி செய்தால் சுவை கூடுவதுடன் கேசரி அதிகமாகவும் கிடைக்கும்.
மைசூர்பாகு மொறு மொறுவென்று வரவேண்டுமா? மைசூர்பாகு செய்து அடுப்பில் இருந்து கீழே இறக்குவதற்கு முன் ஒரு சிட்டிகை சோடா உப்பை போட்டால் பொங்கி வரும்.மொறுமொறுவென்று இருப்பதுடன் கடை மைசூர்பாகு போல் சுவையாகவும் இருக்கும்.
ஜாங்கிரி செய்யும்போது துணிக்கு பதிலாக பால் கவரை கோன் மாதிரி செய்து மூலையில் வெட்டிப் பயன்படுத்தலாம்.
தேன்குழல் செய்யும் போது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.
பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால், பாதுஷா மிகவும் மிருதுவாக இருக்கும்.
ரவா உருண்டை செய்யும் போது ஜவ்வரிசியையும் வறுத்துப் பொடி செய்து, சர்க்கரைப்பொடி, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.