சேலம் சுபா
கோடைக்கால வெப்பத்திலிருந்து நம் உடல் நலனைக் காத்துக்கொள்ள, இந்த வெயில் சீசனில் மட்டும் பிரத்யேகமாகக் கிடைக்கும் கீழ்கண்ட 10 உணவுகளை உண்டு உடலைக் குளிர வைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் பெறுவோம்.
நுங்கு:
நுங்கில் உள்ள வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதன் நீர் வேர்க்குருவிற்கு நல்ல நிவாரணம் தருகிறது.
நீர் மோர்:
மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோபுளோவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதை அருந்துவதால் நீரிழப்பினால் ஏற்படும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்துவிடும். தாகத்தைத் தணித்து, வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதுடன் காரமான உணவுகளால் ஏற்படும் வயிற்று எரிச்சலையும் இது தணிக்கிறது.
இளநீர்:
இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்துள்ளதால் சரும பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் இது பெரிதும் உதவும்.
தர்பூசணி:
நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான வைட்டமின் சி அதிகம் உள்ள இதை உட்கொள்வதன் மூலம். நம் உடலால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். தவிர, நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளதால் சருமம் வெயிலால் உலர்ந்து போகாமல் இருக்கும்.
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துடன் நார்ச்சத்தும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செரிமானத்திற்கும் இது நல்லது. இதிலுள்ள பொட்டாசியம் வெயிலினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
கூழ்:
கேழ்வரகு மற்றும் கம்பு கொண்டு செய்யப்படும் கூழ், நம் உடலுக்குத் தரும் நன்மைகள் ஏராளம். இதில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோபுளோவின் ஆகியவையும் உள்ளன. மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலுக்கு குளிர்ச்சியையும், வலுவையும் தருகிறது.
ராகி களி:
பல்வேறு வகையான தாதுப்பொருட்கள் நிறைந்த தானியங்களில் ராகியும் ஒன்று. இதில் எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. கோடைக்கேற்ற ஆரோக்கிய உணவு இது.
மாங்காய்:
மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் உட்கொண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், உடலின் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர்க்குத்தலை இது தடுக்கும்.
மோர் மிளகாய்:
மிளகாயில் உள்ள அதிக அளவு காப்சைசின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளையும் தடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்னைப் போக்கி குடல் மேம்பட உதவுகிறது. இதில் கலோரிகள் எதுவும் இல்லை என்பதால் உடல் எடையும் குறையும். பல மருத்துவப் பயன்கள் நிறைந்த மிளகாயை மோரில் கலந்து வெயிலில் காய வைப்பதால் இது உடலுக்கு மேலும் நலன் தரும்.
பானகம்:
நீர் மோருடன் வெயில் கால பானமாக தாகம் தீர்த்து, உடல் சூட்டைத் தவிர்த்து, நல்ல புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் தரவல்லது பானகம். உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் ருசியான இது வெயிலினால் ஏற்படும் சோர்வைப் போக்கி உடனடி சக்தியை தருவதோடு, வயிற்று வலி, நீர் கடுப்பு, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் குறைக்கும்.