கே.எஸ்.கிருஷ்ணவேனி
வத்த குழம்புக்கு உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்க்க, சுவை கூடுவதுடன் உப்பு சுவையும் சரியாகிவிடும்.
வெண்டைக்காயை பொரியல் செய்து இறக்கி தோல் நீக்கி பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாற ருசியாக இருக்கும்.
பால் திரிந்து விட்டால் அதை வீணாக்காமல் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு கையால் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் சர்க்கரைப்பாகில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க ருசியான "மினி ரசகுல்லா" தயார்.
தேங்காய் பர்பி, மைசூர் பாகு போன்றவற்றை தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டு போடும்போது கத்தியை நன்கு சூடு செய்து துண்டுகள் போட பிசிறு தட்டாமல் அழகாக துண்டுகள் விழும்.
தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை வதக்கும்போது சர்க்கரை சிறிதளவு சேர்த்து வதக்க சீக்கிரம் வதங்கிவிடும்.
பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி சிறிது தயிர் அல்லது எலுமிச்சை சாற்றில் நாள் முழுவதும் ஊற விட்டு அடுத்த நாள் வெயிலில் நன்கு காயவைத்து எண்ணையில் பொரித்தெடுக்க தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ் தயார்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றை கிரிஸ்பியான பொரியலாக செய்வதற்கு, வெந்ததும் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தெடுத்த பிறகு அரிசி மாவு 2 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன், உப்பு, காரம் சேர்த்து கிளறி சிறிது எண்ணெய் சேர்த்து வதக்க முறுமுறுப்பான ரோஸ்ட் ரெடி.
அடைக்கு ஊற வைக்கும் பருப்புடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்து கரகரப்பாக அரைத்து அடை செய்ய முறுமுறுப்புடன் கூடிய ருசியான அடை தயார்.
சௌசௌ நறுக்கும்போது கையில் பிசுபிசுப்பு உண்டாகும். இதற்கு சௌசௌவை இரண்டாக நறுக்கி ஒன்றோடொன்று சேர்த்து நன்கு தேய்த்து கழுவ பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
குருமா, கிரேவி, கூட்டு வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது பால் கலந்து விட காரம் குறைந்து விடும். உப்பு அதிகமாகிவிட்டால் அதிகம் புளிக்காத தயிர் சிறிது சேர்க்க சரியாகும்.
பாகற்காய் பொரியல், கூட்டு செய்யும் போது கசப்பு அதிகம் தெரியாமல் இருக்க முதலில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொண்ட பிறகு உப்பு, காரம் சேர்த்து வதக்க கசப்பு தெரியாது.
வாழைப்பூவை ஆய்ந்து கள்ளன் எடுத்துவிட்டு இரவு நறுக்கி சிறிது புளித்த மோரும் தண்ணீரும் கலந்து வைத்துவிட கருக்காது. காலையில் பொரியலோ, கூட்டோ, பருப்புசிலியோ செய்ய எளிதாக இருக்கும்.Fenugreek powder
வத்தக்குழம்பு, பொரிச்ச குழம்பு, மிளகு குழம்பு போன்றவற்றை செய்து கீழே இறக்கும் சமயம் சிறிது வெந்தய பொடி சேர்த்து விட மணம் குணம் நிறைந்ததாக இருக்கும்.
சப்பாத்திக்கு கோதுமை மாவை பிசைந்து வைத்து ஊற விட மிகவும் மிருதுவாக வரும். அதுவே பூரிக்கு என்றால் பிசைந்ததும் ஊறவிடாமல் உடனே பூரி போட உப்பிக்கொண்டு எண்ணெய் குடிக்காமல் வரும்.
எலுமிச்சம்பழ ரசம் அல்லது ஏதேனும் கிரேவி செய்யும் போது அவை சூடாக இருக்கும் சமயம் எலுமிச்சை பழம் பிழியக் கூடாது. கசந்துவிடும்.
பொரியலுக்கு நறுக்கும் காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்காமல் இருப்பது நல்லது. அதேபோல் காய்கள் வெந்த நீரை கொட்டாமல், அளவாக நீர் விட்டு வேக விட சத்து வீணாகாமல் கிடைக்கும்.
காய்கறிகள் வெந்த நீர் அதிகம் இருந்தால் அவற்றை வடிகட்டி சிறிது மிளகுத்தூள், உப்பு, வெண்ணெய் ஒரு துளி சேர்த்தால் சுவையான சூப் தயார்.
ரசம் கொதிக்க கூடாது. மொச்சு வந்ததும் இறக்கி விட ருசியாக இருக்கும்.
மோர் குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. மூடினால் நீர்த்து விடும்.
தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ள குழம்பு ,ரசம், சாம்பாருக்கு போட எளிதாக இருக்கும்.