பத்மப்ரியா
கோடை காலத்தில் உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். வெயிலால் ஏற்படும் உஷ்ணம் தணியவும், நோய்களைத் தடுக்கவும் சில யோசனைகள்:
வெயில் காலத்தில் பொரித்த உணவுகள், காரம், புளிப்பு போன்றவற்றைத் தவிர்த்தால், உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து விடுபடலாம்.
தயிர் உடல் குளுமையாக இருக்க உதவுகிறது. சருமத்திற்கும் ஊட்டம் தருகிறது. அதனால் தயிர் பச்சடி, மோர்க் குழம்பு, தயிர் சாதம் போன்றவற்றை கோடை காலத்தில் உணவில் அதிகம் சேர்க்கலாம்.
தாகம் தணிக்க, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நீரை குடித்தால் அது உஷ்ணத்தையே தரும். மண்பானை நீரை குடிக்கப் பயன்படுத்தினால் உஷ்ணம் தாக்காது. தாகமும் தீரும்.
கோடை காலத்தில் சமையலுக்கு நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, நீர் பூசணி, சௌசௌ, புடலங்காய், முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் குளிர்ச்சி பெறும்.
வெயில் காலத்தில், இனிப்புகளுக்கு சர்க்கரைக்கு பதிலாக, வெல்லம், நாட்டு சர்க்கரை சேர்ப்பது நல்லது. வெல்லம் உடல் சூட்டை குறைக்க வல்லது. வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து, உடலுக்கு வலிமையும் தரும்.
பழைய சாதத்தை இப்போது யாரும் விரும்புவதில்லை. ஆனால் பழைய சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது மோர் கலந்து சாப்பிட்டால் உஷ்ணம் தணியும். வயிற்றுப் புண் ஆறும். இதை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
வெயில் சீசனில் தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை பழங்களை சாப்பிடுவது, உடலுக்கு சக்தி தரும்.
கிர்ணி பழத்துடன் பால், கருப்பட்டி சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால், வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்கும். தாகம் தீரும். உடல் உஷ்ணம் தணியும்.
தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது லைகோபினைக் கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வது மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுக்காக்க முடியும்.
கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் பொலிவு பெறும். மாம்பழம் சாப்பிட்டபின் ஒரு கப் பசும்பால் சாப்பிட்டு விட்டால், மாம்பழத்தால் ஏற்படும் உஷ்ணம், உடலில் பற்றாது.