ஆர்.ஜெயலட்சுமி
கட்லெட்டுகள் செய்யும் போது அவற்றில் அரிந்தக் கீரையை கலந்து பிசைந்து பொரித்து எடுங்கள் சுவையும் சத்தும் அதிகமாகும்.
பிரிட்ஜில் வைத்த இட்லிகளை உதிர்த்து உப்புமாவாக செய்தால், கட்டிகள் இன்றி இட்லி உதிர் உதிராகும்.
மீந்துபோன கட்லெட்டுகளை தக்காளி வெங்காயம் கிரேவியில் போட்டு கொதிக்க விட்டால், வித்தியாசமான கோஃப்தா ரெடி பண்ணி விடலாம்.
புதினா கொத்தமல்லி சட்னியை தண்ணீரில் கலந்து அத்துடன் அரிசியை சேர்த்து வேகவிட்டால் ருசியான புதினா சாதம் தயாராகிவிடும்..
குருமா நீர்த்துப் போய்விட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கெட்டி பட்டுவிடும் ருசியும் அதிகமாகும்.
நூடுல்ஸ் வேக வைக்கும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
சாதாரண காபி பில்டரில் காபி பொடியை போட்டால் அடைத்துக்கொள்ளும். எனவே, பில்டரை சூடு காட்டிய பிறகு பொடியை போட்டு வெந்நீர் ஊற்றினால் டிகாஷன் நன்றாகவும் சீராகவும் இறங்கும்.
காய்ந்த மிளகாயை நீளவாக்கில் கிழித்த பிறகு, எண்ணெயில் விதைகள் சிவக்கும் அளவுக்கு வறுத்து பிறகு, துவையல் பொடி செய்தால் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும்.
வற்றல் மிளகாய் ,சீரகம், தனியா, பெருங்காயம் பொட்டுக்கடலை ஆகியவற்றை பச்சையாக மிக்ஸியில் பொடித்து கொத்தவரை காராமணி பொரியலுக்கு போட்டு வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் செய்யும்போது வெங்காயம் விரைவில் வதங்க எண்ணெயில் சிறிது உப்பையும் தூவி வதக்குங்கள். சிறிது நேரத்தில் வெங்காயம் பொன்னிறமாகிவிடும்.
பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது சில சமயம் உருண்டைக் கரைந்து விடும். இதைத் தவிர்க்க பருப்பை அரைத்த உடன், சிறிது எண்ணெய் விட்டு வாணலியில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின் அரிசி மாவு கலந்து உருட்டி, நிறைய புளித்தண்ணீர் விட்டு தளதளவென்று கொதிக்கும் போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.
பச்சை பட்டாணியை வேகவைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேருங்கள். அதன் நிறம் மங்காது.
வெண்ணையை உருக்கி அதில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து வைத்தால் கெட்டுப் போகாது.
வெந்தயம், சீரகம், மிளகு இவற்றை பொன்முறுவலாக வறுத்து எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காரக்குழம்பு வைக்கும் அன்று குழம்பு கொதித்து வரும்போது இதில் இரண்டு ஸ்பூன் போட வேண்டும். காரக்குழம்பே சாப்பிட மாட்டேன் என்பவர்களை கூட சுண்டி இழுத்து சாப்பிட வைத்து விடும்.
கேரட் துருவும் முன் பத்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துத் துடைத்த பிறகு துருவினால், கெட்டியாக இருப்பதுடன் கையில் இருந்து வழுக்கிப் போகாமல் இருக்கும்.