சி.ஆர்.ஹரிஹரன்
கேரட், பீட்ரூட் போன்றவற்றை துருவும்போது, துருவும் கட்டையில் சிறிது எண்ணெய் தடவி துருவினால் எளிதாக துருவலாம்.
இடியாப்பம், பூரண கொழுக்கட்டை போன்றவற்றுக்கு மாவு பிசையும் போது, அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக்கிளறினால் செய்யும் பலகாரங்கள் நல்ல வெண்மையாக இருக்கும்.
ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையை சிவக்க வறுத்து, முதல் நாளே தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் கொஞ்சம் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை தாளித்து, கொண்டைக்கடலையுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைத்து, கடைந்த தயிருடன் கலந்து உப்பும் சேர்த்தால் சுவையான தயிர்பச்சடி ரெடி.
ரவா தோசை செய்யும்பொழுது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
உளுந்துவடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது ஒரு பிடி துவரம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்தால் வடை அதிகம் எண்ணெய் குடிக்காது. டேஸ்டியாகவும் இருக்கும்.
ரவையை வெறும் வாணலியில் போட்டு, சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக்கொண்டால், உப்புமா, கேசரி ஆகியவற்றை எளிதில் செய்து விடலாம்.
சுக்கு, ஏலக்காயை பொடி செய்து வைத்துக்கொண்டால் டீ போடும் போது அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசி ரவை உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிப்பிசிறி வைத்துக்கொண்டு உப்புமா செய்தால் கட்டி தட்டாமல் பொல பொலவென்று வரும்.
நீங்கள் சமையலறையில் பயன்படுத்தும் எவர்சில்வர் பாத்திரங்களின் பளபளப்பு மங்கும்போது, விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவினால் அவை பளபளக்கும்.
ஏலக்காயை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பிறகு எடுத்துப் பொடித்தால் தோல் இல்லாமல் நன்றாக பொடிக்க வரும்.
அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் ஆகியவற்றுடன் ஊறவைத்த கச கசாவையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் அவியல் திக்காகவும், சுவை மிகுந்தும் இருக்கும்.
அல்வா மிக்ஸ் பயன்படுத்தி அல்வா செய்யும்போது, அதிக அளவு வேண்டுமென்றால், ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அந்த விழுதை மிக்ஸுடன் கலந்து செய்தால் நிறைய அல்வா கிடைக்கும்.