கே.எஸ்.கிருஷ்ணவேனி
சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதனை மிகவும் ஈடுபாட்டுடன் செய்ய அனைவரின் பாராட்டுதலையும் பெறலாம். சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் சமையலை சிறப்பாக்கி விடும். இவரின் கைப்பக்குவம் யாருக்கும் வராது என பாராட்டப்படுவோம்.
வெஜிடபிள் பிரியாணி அல்லது புலாவ் செய்வதற்கு தண்ணீர் பாதி தேங்காய் பால் மீதி என சேர்த்து செய்ய ருசியாக இருக்கும்.
ரவா கேசரி செய்யும்போது எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல் ஒரு முறை அன்னாசி பழ துண்டுகளை நறுக்கி சேர்த்தும், மறுமுறை தோல் நீக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்தும் அடுத்த முறை பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத் துண்டுகள் சேர்த்தும் செய்ய மாறுதலான ருசியுடன் நன்றாக இருக்கும்.
உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் பொரியல் செய்யும்போது இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து செய்ய சுவை அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்து விடும். இதற்கு இட்லி வைப்பதற்கு முன் சிறிதளவு பால் கலந்து வார்க்க புளிப்பு சுவை அடிபட்டு விடும்.
எந்த பாயசம் செய்வதாக இருந்தாலும் கடைசியில் 4 பாதாம் பருப்பு, 2 முந்திரி பருப்பு, 2 ஏலக்காய், சிறிதளவு தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து சேர்க்க ருசி கூடும்.
சப்பாத்தி தேய்க்கும் போது மாவு கல்லிலும் சப்பாத்தி கட்டையிலும் ஒட்டாமல் வர மாவு பிசைந்ததும் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கலாம்.
தேங்காயுடன் முந்திரிப்பருப்பு10, பாதாம் பருப்பு 10 இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து செய்யப்படும் பர்பி மிகுந்த சுவையானதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
தக்காளி குருமா செய்யும் போது இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து செய்ய குருமா நன்றாக மணமாக இருக்கும்.
வாழைப்பூவை பொரியல் செய்யும்போது கருக்காமல் இருக்க அவற்றை கள்ளன் நீக்கி பொடியாக நறுக்கியதும் சிறிது கெட்டி மோர் கலந்து இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்க வாழைப்பூ கருக்காமல் இருக்கும். பிறகு கடுகு தாளித்து தேங்காய்த் துருவல் சேர்த்து பொரியல் செய்ய வேண்டியது தான்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேகவைக்க சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும்.