கலைமதி சிவகுரு
முன்னோர்கள் எப்போதும் கைவசம் வைத்திருந்த முக்கியமான மூலிகை ‘வசம்பு’. ‘பேர் சொல்லா மருந்து’, ‘பிள்ளை வளர்ப்பான்’,‘உரைப்பான்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக முக்கியமானது வசம்பு. வசம்பு பயன்படுத்தும்போது அதைச் சுட்ட பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு முதலில் வசம்பு வைத்துத்தான் வளையல் போடுவார்கள். குழந்தைகள் அந்த வளையலைக் கடிக்கையில், நாக்கில் படும்போது பேச்சு நன்றாக வரும்.
வசம்பை பொடி செய்து, மஞ்சள் தூளுடன் சேர்த்து வீடுகளின் மூலையில் போடுங்கள். பூச்சிகள் வராமல் தடுக்கும் முக்கியக் கிருமி நாசினி வசம்பு.
வசம்பையும், மஞ்சளையும் சம அளவில் எடுத்து பொடியாகத் திரித்து, இந்தப் பொடியை பசும்பாலில் கலந்து, கை, கால்களில் தேய்த்துவிட்டு காய்ந்ததும் உருட்டி எடுத்தால் கை, கால்களில் இருக்கும் முடி சுத்தமாகப் போய்விடும். சருமம் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் இந்தப் பவுடரை 4 கரண்டி எடுத்து தேனில் கலந்துகொடுத்தால் அந்த விஷத்தை முறித்துவிடும்.
துணிமணிகள் அடுக்கி வைக்கும் அலமாரிகளில் ஒரு துண்டு வசம்பு போட்டுவிட்டால் பூச்சிகள் வராது; மணமாகவும் இருக்கும்.
குழந்தைகள் வயிறு வலித்து அழும்போது வசம்பை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் சுட்டு, பொடித்து வயிற்றைச் சுற்றித் தடவி விடுங்கள். சிறிது நேரத்தில் வலி நின்றுவிடும்.
திக்கி திக்கிப் பேசுபவர்களுக்கு வசம்பு பொடியுடன் தேன் கலந்து கொடுக்கும்போது பேச்சு சரியாக வரும் வாய்ப்பு உள்ளது.
மூளைக்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி அதிகமாகும்.
வசம்பு பொடி சாப்பிட்டால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல தூக்கம் வரும்.
வலிப்பு நோய் வராமல் தடுக்க வசம்பால் முடியும். ஸ்ட்ரோக் வந்தால் அதிலிருந்து மீள்வதற்கு வசம்பு மிகவும் பயனுடையது.
தலையில் பேன், பொடுகு பிரச்னை இருந்தால் வசம்பு பவுடர் எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் கலந்து சூடு செய்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் பொடுகு, பேன் மறைந்தேபோகும்.
வயிற்றில் இருக்கும் குடல் பூச்சியிலிருந்து தலையில் இருக்கும் பூச்சி வரை போக்கடிக்கும் ஒரு உன்னதமான மருந்து வசம்பு.
¼ ஸ்பூன் வசம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைக் கட்டுக்குச் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. மேலும் இருமலைக் குணப்படுத்தும்.
சுடு தண்ணீர், மஞ்சள்தூள், கருவேப்பிலை ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம்.