பத்மப்ரியா
நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால், எளிதில் கெடாது.
கேஸ் அடுப்பு பர்னரில் செம்பட்டை நிறம் படிந்தால், சில துளிகள் எலுமிச்சை சாற்றை அதன் மேல் தடவி தேய்த்தால் பழைய நிறம் வந்து விடும்.
சர்க்கரைப் பாகில் எலுமிச்சைசாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது. பூத்துப்போகாது.
வாட்டர் பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
பயறு வகைகளை ஊறப்போட மறந்து விட்டால், பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம்.
வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும்.
வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், ஊறி மாவு போல கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீ ஸ்பூன் மோர் கலந்துவிட்டால், மறுநாளும் சாதம் மல்லிகைப்பூப் போல உதிர் உதிராக வரும்.
காபித்தூள் பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே ஃப்ரிஜ்ஜில் வைத்து விடவும். எப்போது எடுத்தாலும், அதே மணத்துடன் இருக்கும்.
முருங்கை இலையைக் கிள்ளுவது கஷ்டம்தான். ஒரு ஈரத்துணிக்குள் முருங்கை கொத்தை இறுக்கமாகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பிரித்தால், இலைகள் நன்றாக உதிர்ந்திருக்கும்.
பிரியாணி செய்யும்போது, குக்கர் மூடியைத் திறந்ததுமே, எலுமிச்சைச் சாறை சிறிதளவு விட்டுக் கிளறி விடவும். பிரியாணி பொலபொலவென இருக்கும்.
பொடி வகைகளில் உப்பு அதிகமகிவிட்டால், குறிப்பிட்ட பொடி வகையில் உள்ள பருப்பு எதுவோ அதை தேவைக்கேற்ப கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும். அதை கடாயில் வறுத்து, பொடியாக்கி, பொடி வகையுடன் கலந்தால் சரியாகிவிடும்.
ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, அதை மசால்வடை மாவில் கலந்து வடை சுட்டால், வடை மொறு மொறுப்பாக வரும்.