நான்சி மலர்
தமிழ்நாட்டின் இல்லங்களில் அதிகம் மீதமாகும் 10 முக்கிய உணவுகளை நாவூறும் புது அவதாரமாக மாற்றும் எளிய வழிகள்...
1/10. மீதமான இட்லி: சில்லி இட்லி
இட்லிகளை சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்து பின்னர் வெங்காயம், குடைமிளகாய், காரசாரமான மசாலாக்களுடன் சேர்த்து வதக்கினால், ஹோட்டல் ஸ்டைல் 'சில்லி இட்லி' தயார்.
2/10. மீதமான சப்பாத்தி: கொத்து சப்பாத்தி
சப்பாத்திகளை உதிரி உதிரியாகப் பிய்த்துக் கடாயில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் சேர்த்து, கரம் மசாலா மற்றும் சால்னா ஊற்றி, கரண்டியால் நன்றாகக் கொத்தினால் 'கொத்து சப்பாத்தி' ரெடி.
3/10. மீதமான வெள்ளை சாதம்: தாளித்த சாதம்
மதிய சாதம் மீதமாகிவிட்டால், இரவு உணவிற்கு அதுதான் பெஸ்ட். கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்த 'தாளிப்பு சாதம்' அல்டிமேட் சுவை.
4/10. மீதமான தோசை மாவு: கார குழிப்பணியாரம்
தோசைமாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு-கடலைப்பருப்பு தாளித்துக் கொட்ட வேண்டும். பணியாரக் கல்லில் ஊற்றி எடுத்தால் குழிப்பணியாரம் தயார்.
5/10. மீதமான பிரெட்: பிரெட் உப்மா
பிரெட் துண்டுகளைச் சதுரங்களாக வெட்டி, தோசைக் கல்லில் லேசாக வறுத்து கடாயில் கடுகு, வெங்காயம் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் வதக்கி, வறுத்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறினால் சட்டென்று முடியும் 'பிரெட் உப்மா'.
6/10. மீதமான பூரி: பூரி லாடு
பூரிகளை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்குப் பொடித்து வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் நெய் சேர்த்து பிசைந்து உருண்டையாகப் பிடித்தால், அருமையான இனிப்பு லட்டு தயார்.
7/10. மீதமான சாம்பார்: சாம்பார் சாதம்
மீதமான சாம்பாரை சூடான சாதத்துடன் ஒன்றாகக் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சமாகப் பெருங்காயத்தூள், நெய், சாம்பார் பொடி தூவி, குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்தால், கமகமக்கும் 'நெய் சாம்பார் சாதம்' ரெடி.
8/10. மீதமான வடை: வடை கறி
மெதுவடை அல்லது பருப்பு வடை மீந்துவிட்டால், அவற்றை நன்றாக உதிர்த்து வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது தாளித்து மசாலா குழம்பு வைக்க வேண்டும். கொதிக்கும் குழம்பில் உதிர்த்த வடைகளைப் போட்டால் 'வடை கறி' தயார்.
9/10. மீதமான பொங்கல் : பொங்கல் வடை
வெண் பொங்கல் கெட்டியாகிவிட்டால், அதனுடன் அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அதை எண்ணெயில் தட்டிப் போட்டால், 'பொங்கல் வடை' தயார்.
10/10. மீதமான பாயசம்: பாயசம் ஐஸ் கேண்டி
சேமியா அல்லது பருப்புப் பாயசம் மீதமாகிவிட்டால், அதை அப்படியே 'குல்ஃபி' மோல்டுகளில் ஊற்றி, ப்ரீசரில் 8 மணி நேரம் வைத்தால், சுவையான 'பாயசம் ஐஸ்' தயார்.