பத்மப்ரியா
1/12. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
2/12. எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால், மணம் தூக்கலாக இருக்கும்.
3/12. நீர் மோர் கரைக்கும் போது சிறிது புளிக்காய்ச்சலையும் சேர்த்து கரைத்துவிட்டால் போதும் வேறு எதுவும் சேர்க்காமல் நீர் மோர் சுவையாக இருப்பதுடன் வாசனையும் தூக்கலாக இருக்கும்.
4/12. ரவா லட்டு செய்யும்போது, சிறிதளவு அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்து சேர்த்து பிடித்தால் சுவை அதிகரிக்கும்.
5/12. தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான பச்சடி தயார்.
6/12. தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
7/12. சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு அதன்பின் சேமியாவுடன் நெய், சர்க்கரை, முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறினால் கேசரி உதிர் உதிராக இருக்கும்.
8/12. குருமா நீர்த்து விட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸைப் போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கெட்டிப்பட்டு விடும் ருசியும் அதிகமாகும்.
9/12. கேரட்டை வாங்கி தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் போட்டு வைக்கவும். இரவு நேரத்தில் தண்ணீரிலிருந்து எடுத்து விடவும். பிறகு மறுநாள் காலை தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படி செய்து வந்தால், கேரட்டைப் பத்து நாட்கள் வரை வாடாமல் அழுகாமல் பாதுகாக்கலாம்.
10/12. துவரம் பருப்புடன் தேங்காய்த் துண்டை சேர்த்து வேகவிட்டால், விரைவில் வெந்துவிடும்.
11/12. மிளகாய், கருணைக் கிழங்கு ஆகியவற்றை கையாளும்போது கைவிரல்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். அப்போது சிறிதளவு வெல்லக்கரைசலில் கைகளை நனைத்தால், நிவாரணம் கிடைக்கும்.
12/12. மீதமிருக்கும் சப்பாத்தியை இட்லி குக்கரில் லேசாக ஆவியில் வேக வைத்து சாப்பிட்டால் சப்பாத்தி மிருதுவாகவும் சாப்டாகவும் இருக்கும்.