மகாலெட்சுமி சுப்ரமணியன்
தேங்காய் அடர்த்தியாக இருக்கிறதா என்று அறிய: தலையில் வகிடு மாதிரி கோடுகள் தெரியும். இந்தக் கோடு எடுப்பாக இருந்தால் தேங்காயின் வெண் பகுதி அடர்த்தியாக இருக்கும்.
கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு துடைத்து விட்டு கழுவ பளிச்சென்று இருக்கும்.
வெண்ணெய், சீஸ் வாங்கியதும் அப்படியே வைத்து எடுக்காமல் சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்து கொண்டு தேவைக்கு அவ்வப்போது ஒன்றிரண்டு துண்டுகளை உபயோகிக்க, எப்போதும் ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.
சாம்பாரில் போட காய் இல்லாதபோது, மாங்காய் வத்தல், கத்தரி, வெண்டை வற்றலை தாளிப்புடன் பொரித்து குழம்பு வைக்க நன்றாக இருக்கும்.
தோசைக்கு அரைக்கும் போது அரிசி, உளுந்து மட்டுமே போட்டு அரைக்காமல் சோயா பீன்ஸ், அவல், ஜவ்வரிசி, சிறுதானிய குருணை ஒரு பங்கு என இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சேர்த்து அரைத்து தோசை வார்க்க சுவையோடு (Smart cooking tips) சத்தும் சேரும்.
கீரைகளை நெடுநேரம் சமைக்காமல் தண்ணீர் தெளித்து குறைந்த தீயில் சர்க்கரை கொஞ்சம் சேர்த்து சமைக்க பசுமை மாறாமல் சுவையோடு சத்துக்களும் கிடைக்கும்.
எந்தவித தொக்கு செய்தாலும் ந. எண்ணெயில் தாளித்து கடுகு பொடி, காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து காயை வதக்கி வெந்ததும் வெந்தயம் பொடி, வெல்லம் சேர்த்து இறக்க சுவை நன்றாக இருக்கும்.
அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா செய்யும்போது தே. எண்ணெயில் தாளித்து காய்கறிகள் பொடியாக நறுக்கி சேர்த்து, தே.துருவல் போட்டு இறக்க சுவை சூப்பராக இருக்கும்.
தயிர் பச்சடி செய்யும்போது வெங்காயத்தோடு, வெள்ளரிக்காய், தக்காளி இரண்டு ஸ்லைஸ் பண்ணி சேர்த்து உப்பு, சர்க்கரை அரை டீஸ்பூன் தயிர், சில்லிஃப்ளேக்ஸ் தூவி கலந்து பரிமாற சுவை நன்றாக இருக்கும்.
வெல்லம் சேர்த்து செய்யும் எல்லா இனிப்புகளுக்கும் தேங்காய்பால், சுக்கு சேர்த்துக் கொள்ள சுவை அதிகரிப்பதோடு, இனிப்பு சாப்பிடுவதால் வரும் நெஞ்சுகரிப்பும் ஏற்படாது.
சீரகப் பொடி, மிளகுப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வது போல் கொள்ளையும் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, ரசம், சூப், கார சட்னி செய்யும் போது சேர்க்க சுவையாக இருக்கும்.
ப்ரெட் உப்புமா, சிறுதானிய ரவை உப்புமா, கிச்சடி செய்யும்போது கரம்மசாலா தாளித்து வெங்காயம் பூண்டு காய்கறிகளை சேர்த்து கலந்து செய்ய மேலாக கொஞ்சம் நெய் உருக்கியதை ஊற்றி கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாற சுவை நன்றாக இருக்கும்.
நான்வெஜ் மசாலா பொடிகளை வெஸ் குருமா, புலாவ், வெஜ்ஃப்ரை செய்யும்போது சேர்த்து செய்ய சுவை நன்றாக இருக்கும்.
மாவு இல்லாத சமயங்களில் ஈஸியாக பன் தோசை செய்யலாம். ரவை-2கப், தயிர்-1/2கப் விட்டு பத்து நிமிடம் ஊற விடவும். இதை மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்துக் கொண்டு அதனுடன் தாளிப்பு செய்து வெங்காயம், காய்கறிகள் போட்டு கலக்கி வைக்கவும். தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி சிவந்ததும் மறுபுறம் திருப்பி எடுத்து கார சட்னியுடன் பரிமாற சுவையான பன் தோசை சூப்பராக இருக்கும்.