சி.ஆர்.ஹரிஹரன்
கேரட், பீட்ரூட் போன்ற காய்களை எளிதாகத் துருவ காய்களின் தோலை சீவியதும், தண்ணீரில் கழுவி துணியால் நன்கு துடைத்துவிட்டுப் பிறகு துருவுங்கள். கையிலிருந்து வழுக்காமல் இருக்கும் என்று மட்டுமல்லாமல் கொழகொழப் பில்லாமல் எளிதில் துருவவும் முடியும்.
இரவில் சாதம் மிஞ்சி விட்டதா? கவலை வேண்டாம். அந்தப் பழைய சாதத்துடன் மைதாமாவு கலந்து, மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான தோசை மாவு ரெடி.
தக்காளிக் குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தை அரைத்து விடவும். குருமாவின் சுவையே அலாதி தான்.
கீரையைக் கழுவும் நீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கழுவினால் நச்சுக்கள் நீங்கி கீரை சமையலுக்கு பயன்படுத்த தயாராகி விடும்.
தயிர் சாதத்துக்கு ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் பால், இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து வேக விட்டு சாதம் கலந்தால் தயிர் சாதம் மிகவும் சுவையாக இருக்கும் என்று மட்டுமல்ல, இரவு வரை புளித்துப் போகாமலும் இருக்கும்.
கேசரி செய்யும்போது தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொண்டால் கேசரியின் சுவை அதிகரிக்கும்.
சர்க்கரைப் பொங்கல் வேகும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றிப் பாருங்கள். சர்க்கரைப் பொங்கலின் சுவை ஊரைத்தூக்கும்.
புளியோதரை தயாரிக்கும் போது, அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் வறுத்த கடலையைச் சேர்த்தால் புளியோதரை மிகவும் சுவையாக இருக்கும்.
வெஜிடபிள் சூப் செய்யப் போகிறீர்களா? ஒரு ஸ்பூன் வெண்ணையில் ஒரு ஸ்பூன் மைதாமாவு போட்டுச் சிறிது வறுத்து பேஸ்ட் போலாக்கிச் சேர்த்தால் சூப் திக்காக இருக்கும் என்று மட்டுமல்லாமல் நல்ல சுவையாகவும் இருக்கும்.
அரைமணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்த பிறகு சமைத்தால் பாகற்காய் கசக்காது.
காய்கறி சாலட் செய்யப் போறீங்களா? ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். சாலட் மிகவும் சுவையாக இருக்கும்.
சேமியாவை நெய்யில் மிதமான சூட்டில் வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடித்து மைசூர்பாகு போல அதே பதத்தில் செய்தால் சுவை மிகுந்த சேமியா பாகு ரெடி.