ஆர்.கீதா
வத்தல் குழம்பில் வெல்லம் சேர்ப்பதற்கு பதில் தேன் சேர்த்தால் குழம்பின் சுவையும், மணமும் கூடும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேருங்கள். ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
காலையில் குருமா, அல்லது குழம்பு செய்யும்போது, அதனுடன் சிறிது புளியைச் சேர்க்கவும். இதனால் குழம்பு இரவு வரை கெடாமல் இருக்கும்.
கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி செய்தால் உப்பலாக வரும். மிருதுவாகவும் இருக்கும்.
முறுக்கிற்கு கடலை மாவு, பொட்டுக் கடலை மாவினை அரிசி மாவுடன் 1:2 என்ற விதத்தில் கலந்து செய்தால் முறுக்கு மொறு மொறுவென இருக்கும்.
பால் பாயசம் செய்யும் போது ஒரு வாழைப்பழத்தை நசுக்கிப் போட்டுச் செய்தால் சுவையாக இருக்கும்.
பால் சேர்த்துச் செய்யும் பலகாரங்களுக்கு பாலை நன்றாகக் காய்ச்சிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.
ரவை உருண்டை செய்யும்போது ஜவ்வரிசியையும் வறுத்துப் பொடிசெய்து, சர்க்கரைப் பொடி, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து உருண்டை பிடித்தால், வித்தியாசமான சுவையில் இருக்கும்.
நான்- ஸ்டிக் பேனில் திரட்டுப்பால் செய்தால், பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமும் இல்லை. ஓரங்களில் ஒட்டாது. கொதித்துக் குறையும் அளவு கூட அதிகமாக இராது. சாதாரணப் பாத்திரத்தில் செய்வதை விட திரட்டுப்பால் சிறிது அதிகமாகவே கிடைக்கும்.
ரவா உப்புமா செய்யும்போது, பாதியளவு தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் ருசியாக, மணமாக இருக்கும்.
கேசரி செய்யும்போது நீரின் அளவைக் குறைத்து, அதே அளவுக்கு பால் கலந்து செய்து பாருங்கள் கேசரி நல்ல மணத்துடன், பால் வாசனையுடன் இருக்கும்.
கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்யும்போது ஒரு கப் பாலை விட்டால் மணமாக இருக்கும்.